சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திட்டங்கள் நகரின் பல பகுதிகளுக்கும் வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. படிப்படியாக மெட்ரோ ரயில்களை பயன்படுத்தக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு குறுகிய நேரத்திலேயே சவுகரியமாகன் சென்று விடலாம் என்பதால் வேலைக்கு செல்வோர், கல்லூரி செல்பவர்கள் என நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தை பொருத்தவரை பயணிகளுக்கு ஏற்ற வகையில் பல்வேறு புதுமையான வசதிகளை ரயில் நிலையங்களில் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கூடிய விரைவில் மெட்ரோ ரயில் நிலையங்களின் அடையாளத்தையே மாற்றக்கூடிய வகையிலான வசதிகள் வரப்போகின்றன .மெட்ரோ ரயில் நிலையங்கள் என்பது மிகப்பெரிய கட்டமைப்பு.

தற்போதைக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்கள் , பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்யக்கூடிய இடங்கள், சிறு சிறு ஸ்நாக்ஸ் கடைகள் செயல்பட்டு வருகின்றன . ஆனால் கூடிய விரைவில் மெட்ரோ ரயில் நிலையங்கள் பெரிய ஷாப்பிங் மையங்களாக மாற இருக்கின்றன.
மெட்ரோ ரயில் நிலையங்களில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை பயன்படுத்தி வருவாய் ஈட்டும் முயற்சிகளில் சென்னை மெட்ரோ ரயில் கழகம் இறங்கி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களை போலவே பயணிகள் ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற வகையிலான கடைகள் , உணவகங்கள் உள்ளிட்டவை கொண்டுவரப்பட இருக்கின்றன .
தற்போதைக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் சிறு சிறு உணவு மற்றும் குளிர்பானங்கள், டீ, காபி உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைகள் இயங்குகின்றன. இருந்தாலும் பெருவாரியான இடம் என்பது காலியாகவே இருக்கிறது . இவற்றை கடைகளாக மாற்றி வாடகைக்கு விட்டால் அதன் மூலம் மாதம் ஒரு கணிசமான வருமானம் கிடைக்கும் என மெட்ரோ ரயில் கழகம் முடிவு செய்து இருக்கிறது .
தற்போது மெட்ரோ ரயில் ரயில்களை பயன்படுத்தக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் அவர்கள் எளிமையாக ஷாப்பிங் செய்வது தங்களுடைய லஞ்ச் மற்றும் டின்னரை ரயில் நிலையங்களில் இருக்கும் கடைகளிலேயே முடித்துக் கொள்வது என்பன உள்ளிட்ட வசதிகளை செய்து தர சென்னை மெட்ரோ ரயில் கழகம் காலியாக இருக்கும் இடங்களை எல்லாம் கடைகளாக மாற்றி வாடகைக்கு விடுவதற்கு முன் வந்திருக்கிறது.
மொத்தம் 14,229 சதுர மீட்டர் பரப்பளவிலான இடங்களை கமர்சியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஏலம் விடும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கி இருக்கிறது . சென்னையில் செயல்படக்கூடிய 26 ரயில் நிலையங்களிலும் இந்த ஷாப்பிங் வசதியையும் உணவகங்களை நிறுவவும் மெட்ரோ ரயில் கழகம் திட்டமிட்டு இருக்கிறது.
அண்ணா நகர் ,ஆலந்தூர் ,ஆயிரம் விளக்கு, நந்தனம், வடபழனி ,விம்கோ நகர் உள்ளிட்ட 26 ரயில் நிலையங்களில் இருக்கக்கூடிய இடங்கள் கமர்ஷியல் நோக்கங்களுக்காக வாடகைக்கு விடப்பட உள்ளன .இப்போதைக்கு இந்த பகுதிகளை கடைகளாக மாற்றுவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டிருக்கிறது. அடுத்த மூன்றிலிருந்து நான்கு மாதங்களுக்குள் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும்.
2026 ஆம் ஆண்டின் மத்தியிலேயே மெட்ரோ ரயில் நிலையங்கள் பெரிய ஷாப்பிங் மையங்களாகவும் உணவு விடுதிகளின் மையங்களாகவும் மாறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதிதாக கட்டப்படக்கூடிய மெட்ரோ ரயில் நிலையங்களில் எல்லாம் இந்த கட்டுமான பணியின் போதே சூப்பர் மார்க்கெட் மற்றும் அலுவலக இடங்கள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கான பணிகளையும் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


