கோவை: சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் எல்லாம் சாலையில் சென்றாலே குறைந்தது 10 டெலிவரி ஊழியர்களாவது நம் கண்களில் பட்டுவிடுவார்கள். அந்த அளவிற்கு ஆன்லைன் டெலிவரி சேவைகள் வளர்ச்சி அடைந்துள்ளன.
ஸ்விக்கி, சோமேட்டோவில் உணவு டெலிவரி செப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட்டில் பொருட்கள் டெலிவரி அமேசான், பிளிப்கார்ட் டெலிவரி என இந்தியாவில் இந்த துறை வேகமாக வளர்ந்து லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு தந்துள்ளது. பார்ட் டைம் முறையிலும், முழு நேரமாகவும் இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் டெலிவரி பார்ட்டனர்களாக வேலை செய்கின்றனர்.

இவ்வாறு டெலிவரி வேலையில் ஈடுபடுபவர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் போன்ற கிக் தொழிலாளர்களுக்கு ஓய்வெடுப்பதற்கும் கழிவறை உள்ளிட்ட வசதிகளும் கிடைக்காமல் தவிக்கின்றனர். தற்போது இந்த வேலைகளில் அதிக அளவில் பெண்களும் ஈடுபடக்கூடிய சூழலில் தான் கோயம்புத்தூர் மாநகராட்சி கிக் தொழிலாளர்களுக்கு என இணையத் தொழிலாளர் கூடம் எனப்படும் ஓய்வெடுக்கும் அறைகளை கட்டி இருக்கிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சி கூடிய விரைவில் இந்த ஓய்வறைகளை திறக்க இருக்கிறது. ஏற்கனவே சென்னையில் இது போன்ற 25 பேர் வரை ஓய்வு எடுக்கக் கூடிய வகையிலான கிக் பணியாளர்களுக்கான ஓய்வறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன. சென்னையில் கேகே நகர் ,அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் முதல் கட்டமாக இது சோதனை செய்து பார்க்கப்பட்டது .

தற்போது கோயம்புத்தூரிலும் இதே திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. டெலிவரி ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்கான இணைய தொழிலாளர் கூடத்தை கோயம்புத்தூர் மாநகராட்சி அமைத்திருக்கிறது. தற்போதைக்கு காந்திபுரம் மற்றும் ஆர்.எஸ். புரம் ஆகிய இரண்டு பகுதிகளில் டெலிவரி ஊழியர்களுக்கான இந்த ஓய்வு அறை கட்டப்பட்டிருக்கிறது. காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் அருகிலேயும் ஆர்.எஸ்.புரம் டிபி சாலை பகுதியிலும் இந்த ஓய்வறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
டெலிவரி ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. குளிர்சாதன வசதியோடு 20 ஊழியர்கள் அமரும் வகையில் இருக்கைகள் மற்றும் செல்போன் சார்ஜிங் பாயின்ட்கள் , கழிப்பறை வசதிகள் ஆகியவை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன . மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் வீல் சேர்கள் செல்வதற்கான பிரத்தியேக வசதிகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
நாள்தோறும் சாலைகளில் அலைந்து திரிந்து டிராபிக் ஜாமில் சிக்கி தவிக்க கூடிய டெலிவரி ஊழியர்கள் சற்றே ஓய்வெடுக்க இந்த அறைகள் பயன்படும். கூடிய விரைவில் கோவை மாநகராட்சி இந்த ஓய்வறைகளை திறந்து அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது.


