தீபாவளி என்றாலே குதூகலம் தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பட்டாசுகளை ஆர்வத்தோடு வெடித்து மகிழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பட்டாசுகள் எவ்வளவு அதிகமாக வெடிக்கபடுகிறதோ அதே அளவிற்கு காற்று மாசுபாடும், பட்டாசு குப்பைகளும் அதிகமாகிக்கொண்டே போகிறது. தீபாவளியன்று இரவே தூய்மை பணியாளர்களும் பட்டாசுக் குப்பைகளை அகற்றத் தொடங்கிவிடுகிறார்கள்.
இந்த வருடமும் நேற்று தீபாவளி வெகு விமர்சையாகக் கொண்டாடி பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். பெரிய அளவில் பேப்பர்களை ரோல் செய்து இருக்கும் பட்டாசுகளையே இளைஞர்கள் விரும்பி வாங்கி வெடித்தனர். இதனால் அதிக அளவு பட்டாசு குப்பைகள் சாலைகளில் காணப்பட்டது. மழையும் விட்டு விட்டு பெய்து வந்ததால் பட்டாசு குப்பைகள் எல்லாம் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு சாக்கடைகளில் தேங்கியது.

இதனால் நேற்று இரவிலிருந்தே தூய்மைப் பணியாளர்கள் பட்டாசுக் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். குப்பைகளை அகற்றும் பணியில் அவர்களுக்கு உதவிகரமாக இருப்பதற்காகவும் மக்களுக்கு பட்டாசுக் குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து இன்று காலை திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தமும் குப்பைகளை அகற்றத் தொடங்கினார்.