2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை பொதுமக்களுக்கு மட்டுமல்ல வணிகர்களுக்கு மிகச்சிறந்த ஒரு ஆண்டாக மாறி இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் தீபாவளி பண்டிகையொட்டி 5. 40 லட்சம் கோடி ரூபாய்க்கு நாடு முழுவதும் பொருட்கள் விற்பனை நடைபெற்று இருப்பதாக அனைத்திந்திய வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
இந்த ஆண்டு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி திருத்தத்தின் மூலம் பல்வேறு பொருட்களின் விலையை குறைத்து இருக்கிறது. இது மக்களின் நுகர்வு போக்கை அதிகரிக்கச் செய்தது. பல்வேறு பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் வழக்கத்தை விட அதிகமாக இந்த முறை பொருட்களை வாங்கி பயன்படுத்தியுள்ளனர். இது வணிகர்களுக்கு இந்த ஆண்டு சிறந்த ஒரு தீபாவளியாக மாற்றி இருக்கிறது.

ஜிஎஸ்டி திருத்தம் , போனஸ் பணம் என மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்தது. எனவே மக்கள் விலை குறைவை பயன்படுத்தி இந்த ஆண்டு பணத்தை நன்றாக செலவு செய்து பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இது வணிகர்களுக்கு இந்த ஆண்டு மிகச்சிறந்த விற்பனையை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
அனைத்திந்திய வர்த்தக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவில் தீபாவளி பண்டிகை ஒட்டி மட்டும் 5.40 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன . இந்தியாவின் சில்லறை விற்பனை வரலாற்றிலேயே இல்லாத அளவு முதன்முறையாக 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்திருப்பதாக அனைத்திந்திய வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
2024 ஆம் ஆண்டு விற்பனையோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு 25% அதிகரித்திருப்பதாக கூறி இருக்கிறது. இந்த ஆண்டு சில்லறை விற்பனை சூடு பிடித்ததற்கு முக்கிய காரணமாக ஜிஎஸ்டி வரி திருத்தமும், மக்களிடையே நுகர்வு போக்கு அதிகரித்ததும் காரணம் என தெரிவித்திருக்கிறது .
72% வர்த்தகர்கள் ஜிஎஸ்டி வரி திருத்தமே இந்த ஆண்டு தங்களின் விற்பனை அதிகரிப்பதற்கு காரணம் என தெரிவித்திருப்பதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கூறுகிறது . குறிப்பாக மக்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்குவது போலவே நேரடியாக கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் போக்கும் இந்த ஆண்டு அதிகரித்து இருக்கிறதாம். இந்த பண்டிகை காலத்தில் மட்டும் 50 லட்சம் தற்காலிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்றும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
வீட்டு அலங்கார பொருட்கள், காலணிகள், ரெடிமேட் ஆடைகள் , வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை பொருட்கள் ஆகியவை தான் இந்த ஆண்டில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் விற்பனை 5.4 லட்சம் கோடி ரூபாய்க்கும் சேவை துறையில் 65,000 கோடி ரூபாய்க்கும் வர்த்தகம் நடைபெற்றிருக்கிறது .