சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPFO) என்பது வெறும் சேமிப்புத் திட்டம் மட்டுமல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்கான அடித்தளமாகும். மாதச் சம்பளத்தில் ஒரு சிறிய பகுதி பி.எஃப். கணக்கில் சேமிக்கப்படுவதுடன், அதற்குச் சமமான தொகையை நிறுவனமும் செலுத்துகிறது.
பெரும்பாலானோர் பி.எஃப். தொகையை ஒரு தேவைக்கான மொத்தப் பணமாகக் கருதினாலும், அதில் மிகவும் முக்கியமான மற்றொரு பகுதி ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டமான Employees’ Pension Scheme (EPS) கணக்கில் செல்கிறது. ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதி செய்வது இந்த EPS திட்டம்தான்.

இன்றைய வேகமான உலகில் அடிக்கடி வேலை மாறும் ஊழியர்களுக்கு எழும் பெரிய கேள்வி இதுதான். 10 முதல் 12 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு வேலையை விட்டுவிட்டால், அந்த ஓய்வூதிய நிதிக்கு என்ன ஆகும்..? என்பது தான். ஆனால், இங்குதான் EPFO-வின் விதி மிகவும் தெளிவாக உள்ளது.
மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கு நீங்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை செய்திருக்க வேண்டும். உங்கள் மொத்தச் சேவை 10 ஆண்டுகளுக்குக் குறைவாக இருந்தால், மாதாந்திர ஓய்வூதியம் பெற நீங்கள் தகுதியற்றவராக கருதப்படுவர். ஆனால், உங்கள் சேவை 10 ஆண்டை தாண்டிவிட்டால், உங்கள் ஓய்வூதிய உரிமை லாக் செய்யப்படும்.
அதாவது, 11 ஆண்டுகள் பணிசெய்து வேலையை விட்டு விலகினாலும், நீங்கள் உடனடியாக ஓய்வூதியம் பெற முடியாது. மாறாக, 58 வயதை எட்டிய பின்னரே உங்கள் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து, அதைப் பெற முடியும். 40 வயதில் வேலையை விட்டாலும், 58 வயது வரை காத்திருக்க வேண்டும்.
EPS பங்களிப்பு : ஊழியரின் 12% பங்களிப்பு EPF கணக்கிற்குச் செல்கிறது. அதே சமயம், நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% மட்டுமே இந்த EPS ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 3.67% பிரதான EPF கணக்கிற்குச் சென்றுவிடும். இந்த 8.33% பங்களிப்பிற்குதான் 10 ஆண்டு பணி விதி பொருந்தும்.
உதாரணமாக, ஒருவர் 10 ஆண்டுகள் முழுமையாகப் பணிபுரிந்து, அவரின் ஓய்வூதிய சம்பளம் ரூ.15,000 ஆக இருந்தால், அவர் 58 வயதில் மாதத்திற்கு தோராயமாக ரூ.2,143 ஓய்வூதியம் பெறுவார். இதே ஊழியர், 10 ஆண்டுகளுக்குப் பதிலாக 25 ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்திருந்தால், அவரது மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5,357 ஆக உயர்ந்திருக்கும். எனவே, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியை முடிப்பது, ஓய்வுக்குப் பிறகு ஒரு சிறிய தொகையாக இருந்தாலும், உங்கள் மாதாந்திர ஓய்வூதிய உரிமையைப் பாதுகாப்பதற்கான முதல் மற்றும் முக்கியமான படியாகும்.
