Fact Check : 24 மணி நேரத்தில் ரூ.60,000 வருமானம்.. மத்திய அரசின் இந்த முதலீட்டு திட்டம் உண்மையா..?


சமூக வலைதளங்களில் ஒரு போலி முதலீட்டுத் திட்டம் குறித்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 24 மணி நேரத்தில் ரூ.60,000 சம்பாதிக்கலாம் என்றும் மாதந்தோறும் ரூ.10 லட்சம் வரை கூட எளிதாக சம்பாதிக்க முடியும் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவிப்பதாகவும் அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ படு வைரலான நிலையில், இதை பலரும் உண்மை என நம்பினர். இந்நிலையில் தான், இந்த வீடியோவில் உள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்றும் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் மோசடி கும்பலால் உருவாக்கப்பட்டவை என்று PIB-இன் உண்மைச் சரிபார்ப்புக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

Fact Check : 24 மணி நேரத்தில் ரூ.60,000 வருமானம்.. மத்திய அரசின் இந்த முதலீட்டு திட்டம் உண்மையா..?

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ : PIB-ன் உண்மைச் சரிபார்ப்புக் குழு, இந்த வீடியோ டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டு, தவறான தகவல்களைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது. இது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் திரித்து உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் PIB தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில், PIB வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பதிவில், “ஃபேஸ்புக்கில் பரவி வரும் ஒரு வீடியோ, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எளிதில் தினசரி வருமானம் ஈட்டக்கூடிய ஒரு முதலீட்டுத் திட்டத்தை ஊக்குவிப்பதாக தவறாக காட்டுகிறது. ஆனால், நிதி அமைச்சரோ அல்லது இந்திய அரசோ அத்தகைய எந்தவொரு திட்டத்தையும் தொடங்கவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை” என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

மேலும், “இத்தகைய விரைவில் பணக்காரர் ஆகும் பொறிகளில் மக்கள் சிக்கிவிடக் கூடாது. விழிப்புடன் இருக்க வேண்டும். உண்மை தகவல் அறிந்து செயல்பட வேண்டும். ஒரு வீடியோவை மற்றவர்களுக்கு பகிரும் முன் அதன் உண்மை தன்மை குறித்து சரிபார்க்க வேண்டும்” என்று பொதுமக்களுக்கு PIB எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடிகளில் இருந்து தப்பிப்படி எப்படி..?: இத்தகைய போலியான மற்றும் மோசடி வீடியோக்களில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள PIB சில முக்கிய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

உதடுகளின் அசைவு மற்றும் குரல் ஒத்திசைவை சரிபார்க்கவும் : வீடியோவில் பேசும் நபரின் உதடு அசைவு சிதைக்கப்பட்டிருந்தாலோ அல்லது இயற்கைக்கு மாறான குரல் ஒத்திசைவு (Voice Sync) இருந்தாலோ, அது போலியானதாக இருக்க வாய்ப்புள்ளது.

பின்னணி மற்றும் அடையாளங்கள் : வீடியோவில் உள்ள தேதி, பின்னணி அல்லது அரசு சார்ந்த லோகோக்கள் பொருந்தாமல் இருந்தாலோ அல்லது தவறாக காணப்பட்டாலோ, அது போலியானதாக இருக்கலாம்.

இணைப்புகளைச் சரிபார்க்கவும் : அரசு சார்ந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களின் முகவரிகள் எப்போதும் gov.in என்றுதான் முடிவடையும். வேறு ஏதேனும் நீட்டிப்புகளைக் கொண்ட இணைப்புகள் (Links) வந்தால், அவற்றைச் சரிபார்க்காமல் நம்ப வேண்டாம்.

அதிகாரப்பூர்வ ஆதாரங்களை தேடுங்கள் : ஒரு செய்தியை அல்லது கோரிக்கையைப் பகிர்வதற்கு முன், அதைப்பற்றி நம்பகமான அதிகாரப்பூர்வத் தகவலை தேடி அதன் உண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

சந்தேகத்திற்கிடமான செய்திகளைச் சரிபார்க்கும் முறை : இனிமேல் உங்களுக்கு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செய்திகள் அல்லது தகவல்கள் கிடைத்தால், அது உண்மையா அல்லது போலியானதா என்பதை நீங்களே எளிதில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

அதாவது, உங்கள் செய்தியை என்ற இணையதள முகவரிக்கு அனுப்பிச் சரிபார்க்கலாம். அல்லது 91+87997 11259 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தியை அனுப்பி உண்மைச் சரிபார்ப்பு செய்யலாம். அதேபோல், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் செய்தியை அனுப்பி வைக்கலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *