[ad_1]
பல தசாப்தங்களாகப் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளில் இருந்து தனது வங்கிகள் மற்றும் நிதித்துறையைப் பாதுகாத்து வந்த இந்தியா, தற்போது சர்வதேச முதலீடுகளை பெருமளவில் வரவேற்கிறது. ஒட்டுமொத்த நிகர நேரடி அந்நிய முதலீடு மிதமாக இருந்தாலும், இந்திய நிதி நிறுவனங்களில் உலகளாவிய ஆர்வம் வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது.
15 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தம் : ப்ளூம்பெர்க் வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது இந்தியாவின் நிதி ஆற்றல் மீதான உலகளாவிய நம்பிக்கையின் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது.

துபாயின் எமிரேட்ஸ் NBD மற்றும் ஜப்பானின் சுமிடோமோ மிட்சுய் பேங்கிங் கார்ப்பரேஷன் முதல் அமெரிக்காவைச் சேர்ந்த பிளாக்ஸ்டோன் மற்றும் சுவிட்சர்லாந்தின் சூரிச் இன்சூரன்ஸ் வரை பலதரப்பட்ட சர்வதேச நிறுவனங்கள் இந்திய வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பெரும் முதலீடு செய்து வருகின்றன.
சமீபத்தில், பிளாக்ஸ்டோன் நிறுவனம் ஃபெடரல் வங்கியில் 9.9% பங்குகளை வாங்க 705 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்து, அதன் மிகப்பெரிய பங்குதாரராக மாறியுள்ளது. இந்த அந்நிய முதலீடுகளின் படையெடுப்பு, உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவின் நிதித் திறனில் முதலீட்டாளர்கள் நீண்ட கால மூலோபாய உறுதிப்பாட்டுடன் இருப்பதை காட்டுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வது ஏன்..?:இந்திய வங்கிகள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் காந்தங்களாக மாறியிருப்பதற்கு, குறுகிய கால வாய்ப்புகளைத் தாண்டிய பல காரணங்கள் உள்ளன.
வேகமான பொருளாதாரம் மற்றும் வாய்ப்புகள் : இந்தியா உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. விரைவான நகரமயமாக்கல் மற்றும் வளரும் டிஜிட்டல் சூழல் ஆகியவை இதற்கு உந்து சக்திகளாக உள்ளன. சில்லறை வர்த்தகம், வீட்டு வசதி மற்றும் சிறு வணிகத் துறைகளில் கடன் தேவை அதிகரித்துள்ளது.
வங்கிச் சேவையின் பரவலாக்கம் : இந்தியாவின் மக்கள் தொகையில் ஒரு பெரிய பகுதியினர் இன்னும் முறையான வங்கிக் கடனைப் பெற முடியாமல், முறைசாரா கடன் ஆதாரங்களையே நம்பி இருக்கின்றனர். எனவே, அந்நிய முதலீட்டாளர்களுக்கு, நிதிச் சேவைகள் குறைவாக இருப்பதும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகத் தெரிகிறது.
உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு :யுபிஐ (UPI), ஆதார் போன்ற இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, இந்தியர்கள் பணம் சேமிக்கும், கடன் வாங்கும் மற்றும் பரிவர்த்தனை செய்யும் முறையை மாற்றி அமைத்துள்ளது. இந்த டிஜிட்டல் தயார்நிலை உலகளாவிய நிறுவனங்களுக்கு மேலும் ஒரு கவர்ச்சியாக உள்ளது.
அமைதியின் சோலை இந்தியா : புவிசார் அரசியல் அபாயங்களால் உலகளாவிய நிதிச் சந்தை ஸ்திரமற்ற நிலையில் உள்ள சூழலில், இந்தியா ஒரு அமைதியான சோலையாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து கிராண்ட் தோர்ன்டன் பாரத் நிறுவனத்தின் பங்குதாரர் விவேக் ராம்ஜி ஐயர் கூறுகையில், “புவிசார் அரசியல் அபாயங்கள் நிதி அபாயங்களை அதிகரித்துள்ள நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அபாயங்களை குறைக்கும் நாடுகளில் முதலீடு செய்ய அதிகம் விரும்புகின்றனர். இந்தியாவின் உள்நாட்டு கவனம் மற்றும் உலகப் பொருளாதாரத்துடன் குறைந்த தொடர்பு ஆகியவை முதலீடு செய்ய உகந்தவையாக உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.
நிதித் துறையின் ஈர்ப்பு : கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் நிதித்துறை வாராக் கடன்கள், பெருநிறுவனக் கடன்கள் மற்றும் ஐ.எல். அண்ட் எஃப்.எஸ் (IL&FS), டி.ஹெச்.எஃப்.எல் (DHFL) போன்ற நிறுவனங்களின் சரிவால் மிகவும் மோசமடைந்திருந்தது. ஆனால் இன்றைய சூழலில், இந்திய வங்கிகள் மிகவும் மீள்திறன் கொண்டவையாகவும், சிறந்த மூலதனப் பிணைப்புடனும், அதிக வெளிப்படைத்தன்மையுடனும் உள்ளன.
எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம், இந்திய வங்கிகள் அடுத்த 2 ஆண்டுகளில் வாராக்கடன் செலவுகள் 80 முதல் 90 புள்ளிகள் உயரக்கூடும் என்று கணித்தாலும், இந்திய வங்கிகள் இந்த உயர் கடன் செலவுகளை எளிதில் தாங்க முடியும். மேலும், அவற்றின் வருவாய் பல பிராந்திய சகாக்களை விட ஒப்பிடத்தக்கதாகவோ அல்லது சிறப்பாகவோ இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் அந்நிய முதலீட்டு வரம்பு உயர்வு..?: அந்நிய முதலீடுகளின் இப்போது பொதுத்துறை வங்கிகள் நோக்கியும் திரும்ப வாய்ப்புள்ளது. பொதுத்துறை வங்கிகளை ஒரு வலுவான நிறுவனங்களாக மாற்றுவதற்காக, அவற்றில் தற்போதுள்ள 20% என்ற அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை அதிகரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம், அவற்றால் எளிதாக மூலதனத்தை திரட்ட முடியும். அரசாங்கம் தனது பங்குகளை 51%-க்கு கீழே குறைக்காமல், பொதுத்துறை வங்கிகளின் பொதுத்தன்மையை உறுதி செய்யும் அதே வேளையில், அந்நியப் பங்குகளை அதிகரிக்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது, தனியார் துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 74% ஆக உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் சிறப்பான செயல்பாடு மற்றும் இந்தியாவின் உள்கட்டமைப்பு முதலீடுகளை கருத்தில் கொண்டு, அவற்றில் முதலீடு செய்வது மிகவும் கவர்ச்சிகரமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு பொதுத்துறை வங்கியின் உயர் அதிகாரி கூறுகையில், “இன்று மூலதனமே மிகப்பெரிய தடையாக உள்ளது. நாம் உலகளாவிய சிறந்த வங்கிகளில் ஒன்றாக உயர விரும்பினால், அதற்கு ஆதரவளிக்க ஒரு பெரிய இருப்புநிலை குறிப்பு தேவைப்படுகிறது. சரியான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது ஒரு கேம் சேஞ்ஞராக” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அந்நிய முதலீடுகளின் இந்த அதிகரிப்பு, இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனம் அல்லாத நிறுவனங்களுக்கு தேவையான மூலதனத்தை வழங்குவதோடு, இந்தியாவின் முழு நிதி அமைப்பிலும் புதிய போட்டியையும், புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது.
[ad_2]
