சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2,400 ரூபாய் வரை குறைந்திருக்கிறது . ஒரு கிராம் தங்கத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் சென்றிருக்கிறது. இது சாமானிய மக்களுக்கு சற்றே நிம்மதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
சர்வதேச காரணிகள் இந்தியாவில் தங்கத்தின் விலையை பெருமளவில் உயர்த்தின. இத்தகைய சூழலில் சர்வதேச சந்தையில் திடீரென ஒரே நாளில் தங்கத்தின் விலை ஐந்து சதவீதம் சரிவை கண்டது. இது இந்திய சந்தையிலும் எதிரொலித்து இருக்கிறது.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 300 ரூபாய் விலை குறைந்திருக்கிறது . நேற்று 12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 11 , 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் 96,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று ஒரே நாளில் 2,400 ரூபாய் விலை குறைந்து 93 ,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் தங்கம் விலை ஒரு சவரன் 94,000க்கும் கீழ் குறைந்து இருக்கிறது. தீபாவளி பண்டிகையொட்டி தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த நிலையில் இன்றைய தினம் சற்றே விலை குறைந்திருப்பது சாமானிய மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி தந்திருக்கிறது .செப்டம்பர் , அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களிலும் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த தங்கம் மீண்டும் இறங்குமுகத்தை நோக்கி திரும்பி இருக்கிறது.
இந்தியாவில் தீபாவளி தந்தேராஸுக்காக தங்கம் வாங்கும் போக்கு இருந்ததால் உள்நாட்டில் டிமாண்ட் அதிகரித்ததும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது. தற்போது தீபாவளி பண்டிகை முடிந்து இயல்புநிலை திரும்பி இருப்பதும் தங்கம் விலை குறைய காரணம்.
இந்த தங்கம் விலை குறைவு நீடிக்குமா என்ற கேள்வி எழும் நிலையில் தங்கம் விலை உச்சத்தை எட்டி தற்போது திருத்தத்தில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறுகிய கால திருத்தமாகவே இருக்கும் என்றும் நீண்ட காலத்தில் தங்கத்தின் விலை உயர்வுக்கான காரணிகள் அப்படியே தான் இருக்கின்றன என்றும் தெரிவிக்கின்றனர். அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு, புவிசார் மோதல்கள் , வர்த்தக போர்கள் நிரந்தரமாக முடிவுக்கு வரவில்லை. எனவே குறுகிய கால திருத்தத்தை பயன்படுத்தி தங்கத்தில் முதலீடு செய்யலாம் என அறிவுரை வழங்குகின்றனர்.
சென்னையில் 24 கேரட் தங்கமும் விலை குறைந்திருக்கிறது ஒரு கிராமுக்கு 327 ரூபாய் குறைந்து 12,764 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 2616 ரூபாய் விலை குறைந்து 1,02,112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கமும் கிராமுக்கு நூறு ரூபாய் குறைந்து 9800 ரூபாய்க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 78 , 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .
வெள்ளி விலை கிராமுக்கு இரண்டு ரூபாய் சரிவடைந்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2000 ரூபாய் விலை குறைந்து 1,80,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வந்த வெள்ளி கிராமுக்கு 200 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக வெள்ளி விலை குறைந்து வருகிறது.