latest

தங்கம் விலையில் டிவிஸ்ட்.. 3 நாட்களில் நடந்தது என்ன..? இனி தங்கம் – வெள்ளி வாங்கலாமா? வேண்டாமா?


தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக சரிந்து வரும் நிலையில் மக்கள் தங்கத்தை இப்போது வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் வேளையில், இந்திய சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் 1.12 சதவீதம் குறைந்து, ஒரு அவுன்ஸுக்கு 4,055 டாலர்களாக உள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை 4101 டாலரில் முடிந்த நிலையில் இன்று சரிவை பதிவு செய்தது. திங்கள்கிழமை வர்த்தகத்தில் 4,381.21 டாலர் என்ற வரலாற்று உச்ச அளவில் இருந்து 6 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளது.

தங்கம் விலையில் டிவிஸ்ட்.. 3 நாட்களில் நடந்தது என்ன..? இனி தங்கம் - வெள்ளி வாங்கலாமா? வேண்டாமா?

இந்த மோசமான 3 நாள் சரிவுக்கு பின்பும் தங்கம் இந்த ஆண்டு அதன் முதலீட்டாளர்களுக்கு சுமார் 60 சதவீதம் வருமானத்தை வழங்கியுள்ளது, இது பெரும்பாலான முதலீட்டு சொத்துகளை விட சிறப்பான லாப அளவாகும். இருப்பினும், இந்தச் சரிவு சந்தையில் புதிய ஏற்ற இறக்கங்களை உருவாக்கியுள்ளது.

உள்நாட்டில் இன்று தீபாவளி விடுமுறையால் வர்த்தகம் மூடப்பட்டிருக்கும் வேளையில் இன்று மாலை எம்சிஎக்ஸ் தனது வர்த்தகத்தை திறக்கப்படும் போது, கடுமையான விற்பனை அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எம்சிஎக்ஸ் சந்தை தீபாவளி பலிபிரதிபதா விடுமுறையால் காலை வர்த்தகத்தில் மூடப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் 24 கேரட் தங்க விலை 10 கிராமுக்கு 132,294 ரூபாய்களிலிருந்து 1,25,890 ரூபாய்களாக குறைந்துள்ளது, இது சுமார் 7,000 ரூபாய்கள் அல்லது 4 சதவீதம் சரிவாகும். இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் மக்களுக்கு தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா அல்லது காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கான பதில் தெரிய வேண்டும் என்றால், தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் திடீரென சரிவதற்கு என்ன காரணம் என்னவென்று அறிந்துக்கொள்ள வேண்டும். தங்க விலை சரிவுக்குப் பின்னால் முதலீட்டாளர்களின் லாபம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை முதன்மையானது. ஆனால் இதற்கான காரணம் தான் நாம் இப்போது முழுமையாக அறிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்.

இந்த ஆண்டு தங்கம் பெரும் உயர்வைப் பதிவு செய்ததால், முதலீட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மூலம் முதலீட்டாளர்கள் இந்த உச்ச விலையை பயன்படுத்தி லாபத்தை பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன் வெளிப்பாடாகவே தங்கம் விலை ரீடைல் சந்தையில் 13,309 ரூபாயில் இருந்து 5.4 சதவீதம் சரிந்து 12,589 ரூபாய்க்கு குறைந்துள்ளது.

1. இந்த சரிவுக்கு முக்கியமான காரணமாக அமைந்திருப்பது அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றமும், விரைவில் விரிசல் சரி செய்யப்படும் என்ற நம்பிக்கை தான். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த வாரம் தென் கொரியாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நடக்கவிருக்கும் சந்திப்பில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

2. இதேபோல் அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் விரைவில் சாதகமாக முடிய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா சுமார் 50 சதவீத வரியை விதித்திருக்கும் வேளையில் இதை 15 முதல் 16 சதவீதமாக குறைக்கும் ஒப்பந்தம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது போன்று அமெரிக்காவில் இரு முக்கிய வர்த்தக கூட்டாளி நாடுகள் உடனான வர்த்தக உறவில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றங்கள், உலகப் பொருளாதாரத்தில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகள் மீதான தேவை குறைந்துள்ளது. இதனால், சந்தையில் ஆபத்து ஏற்படுத்தும் உணர்வு குறைந்து, விலை சரிவு தொடர்கிறது.

3. இத்தகைய சூழ்நிலைக்கு நடுவில் முதலீட்டாளர்கள் இப்போது செப்டம்பர் மாத அமெரிக்க நுகர்வோர் விலை குறியீட்டு அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த ரிப்போர்ட் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித கொள்கை குறித்த முடிவுகளின் தெளிவு கிடைக்கும். வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் போது, தங்க விலையில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

முடிவு – தீர்வு
முதலீட்டு சந்தையை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்தச் சரிவு தற்காலிகமானதாக இருந்தாலும், சந்தை ஏற்ற இறக்கங்கள் தொடர வாய்ப்புள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் தங்கள் முடிவுகளை காத்திருந்து அடுத்த 2 வாரங்களில் அமெரிக்கா கையெழுத்திடும் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் அமெரிக்க பணவீக்க தரவுகளுக்கு பின்பு முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *