தங்கம் மற்றும் வெள்ளி விலை சமீபத்தில் வராலாற்று உச்சத்தை எட்டிய நிலையில், பல தங்கத்தை வாங்க முடியாத காரணத்தால் கையில் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்து புதிய நகையை வாங்கினர். இப்படியிருக்கையில் டிரம்ப்-ன் பேச்சு கடந்த 5 நாட்களில் தங்கம், வெள்ளி விலையை தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது.
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை தடாலடியாக குறைந்து வருவது முதலீட்டு சந்தையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. இந்த சரிவு புதிதாக தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவோருக்கு புதிய வாய்ப்பை கொடுக்கும் வகையில் அமைந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் மிகுந்த எச்சரிக்கை உடன் செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இந்திய சந்தையில் தடுமாற்றம் ஏற்பட்டது போல் ஆசியாவின் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. வால் ஸ்ட்ரீட் சந்தையில் காணப்பட்ட உயர்வு தற்போது மந்தமடைந்துள்ளதாக தெரிகிறது.
இன்றைய வரத்தகத்தில் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 4,004.26 டாலர்கள் வரை 2.9 சதவீதம் சரிந்தது. செவ்வாய்க்கிழமை அன்று தங்கம் விலை 6.3 சதவீதம் வரை சரிந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய ஒருநாள் சரிவைப் பதிவு செய்தது.
அதேபோல, வெள்ளியின் விலை 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து, ஒரு அவுன்ஸுக்கு சுமார் 47.6 டாலர்களை எட்டியது. வெள்ளி விலை நேற்றைய வர்த்தகத்தில் 7.1 சதவீதம் சரிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சரிவு உள்நாட்டு மற்றும் வெள்ளிநாட்டு முதலீட்டாளர்களின் திடீர் விற்பனையின் காரணமாக நடந்துள்ளது. அமெரிக்காவின் பணவீக்க தரவுகளும், அதன் பின்பு எதிர்பார்க்கப்படும் வட்டி குறைப்பு மற்றும் இந்தியா- சீனா உடன் அமெரிக்கா நடத்தி வரும் வர்த்தக போரில் திருப்பம் ஏற்படும் என் எதிர்பார்ப்பும், முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்ய தள்ளியுள்ளது. இதேபோல் வரலாறு காணாத உயர் விலையில் இருக்கும் போது முதலீட்டாளர்கள் லாபத்தைப் பெற இந்த வாய்ப்பு ஜாக்பாட் ஆக அமைந்த காணத்தால் அனைத்து தரப்பினரும் தங்கத்தை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்திய ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 4600 ரூபாய் குறைந்து 1,15,400 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 5020 ரூபாய் குறைந்து 1,25,890 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. வெள்ளி விலை எப்போதும் இல்லாமல் கிலோவுக்கு 7000 ரூபாய் குறைந்து 1,75,000 ரூபாயாக குறைந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் இந்த மாதம் முழுக்க தங்கம் விலை அதிகப்படியான ஏற்ற இறக்கத்துடனே இருக்கும் என்பதால், தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யும் முன் எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது, உதாரணமாக இன்று இந்திய பங்குச்சந்தை விடுமுறை என்பதால் ஆசிய சந்தையை பார்க்கும்போது ஐரோப்பாவில் பெரும்பாலான சந்தைகள் சரிவுடன் உள்ளது, ஆசியாவில் ஹாங்காங், ஜப்பான், தைவான், இன்டோநேஷியா, சீனா ஆகியவை சரிவுடன் உள்ளது.