சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது . தீபாவளி பண்டிகை முன்னிட்டு தங்கத்தின் விலை குறையும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த சூழலில் சென்னையில் ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு 2000 ரூபாய்க்கு மேல் உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.
இன்று தங்கம் விலை: தொடர்ந்து ஏற்றதிலேயே இருந்த தங்கம் தீபாவளியை தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு பேரதிர்ச்சி கிடைத்திருக்கிறது . ஒரே நாளில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 260 ரூபாயும் சவரனுக்கு 2080 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 12000 ரூபாயை கடந்துள்ளது. நேற்று 11,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்றைய தினம் 12,180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அக்டோபர் 1 முதல்: நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 95,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று 2,080 ரூபாய் விலை உயர்வு கண்டு 97, 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை இப்படி 1 லட்சத்தை நெருங்கி இருப்பது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை நடத்துவோர் கண்ணீர் சிந்துகின்றனர். அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து இன்று வரை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 1,230 ரூபாய் உயர்ந்து இருக்கிறது . ஒரு சவரனுக்கு தங்கத்தின் விலை 9,840 ரூபாய் என உயர்வு கண்டிருக்கிறது.
24 கேரட் தங்கம்: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை இன்று ஒரே நாளில் 284 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 13 ,288 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 2022 ரூபாய் விலை உயர்ந்து 1,06,304 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கமும் கிராமுக்கு 210 ரூபாய் விலை உயர்ந்து 10,060 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 1680 ரூபாய் விலை உயர்ந்து 80,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறையுமா: தங்கத்தின் விலை குறைவதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. சர்வதேச பொருளாதார நிலவரங்கள் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றன. அமெரிக்கா மத்திய வங்கி மேற்கொண்டு வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பும், டாலர் மதிப்பு வீழ்ச்சி, சீனா மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவின் அறிவிப்பு உள்ளிட்டவை முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி நகர செய்துள்ளது. இது தங்கத்தின் விலையை பல மடங்கு உயர்த்த செய்துள்ளது.
வெள்ளி விலை என்ன: வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 190 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 188 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2000 ரூபாய் விலை குறைந்து 1,90,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிலோ 2 லட்சத்தை கடந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி முதல் வெள்ளி விலை சரிந்து வருகிறது.