ஜெனரேட்டிவ் ஏஐ தொழில் நுட்பங்கள் நாம் வேலை செய்யும் முறைகளையும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் முறைகளையும் மிகப்பெரிய அளவில் மாற்றிவிட்டன. இந்த தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களும் இருக்கிறார்கள், தவறான முறையில் பயன்படுத்தி பிரச்சினை கொடுப்பவர்களும் மோசடியில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் ஏஐ கருவிகளை பயன்படுத்தி யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக மாறி இருக்கிறார். அவருடைய சுவாரசியமான பயணம் குறித்து தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். உத்தரபிரதேச மாநிலம் புலாந்த்சர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறிய கிராமம் தான் உத்தாரவலி. இந்த கிராமத்தை சேர்ந்தவர்தான் விபோர் பரத்வாஜ். டெல்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்த இவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி அரசு அதிகாரியாக பணிக்கு செல்ல வேண்டும் என விரும்பினார் .

ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவர் , குடும்பத்திடம் பெரிய வசதி கிடையாது , கோச்சிங் சென்டர் சேர்ந்து பயில முடியாது. ஆனால் தற்போது படிப்புக்கும் பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டு நம்முடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் பணம் தேவை கிடையாது, ஸ்மார்ட்டான சிந்தனை தான் தேவை என்பதை உணர்ந்து கொண்ட அவர் ஏஐ கருவிகளை பயன்படுத்த தொடங்கினார்.
யுபிஎஸ்சி தேர்வில் இவர் ஆப்ஷனல் சப்ஜெக்ட்டாக இயற்பியல் பாடத்தையே தேர்ந்தெடுத்தார் . அவர் கல்லூரியிலேயே இயற்பியலே படித்து முடித்து இருந்ததால் அவருக்கு அதனை எதிர்கொள்வது வசதியாக இருந்தது. மேலும் 7 மாதங்களில் மிக கவனத்தோடு படித்து யுபிஎஸ்சி மெயின் தேர்வுக்கான சிலபஸையே முடித்திருக்கிறார். இதற்கு அவர் பின்பற்றிய உத்தி இதுதான்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் வந்த கேள்வித்தாள்கள், நாள்தோறும் நடக்கக்கூடிய நிகழ்வுகள் மற்றும் தொடர்ச்சியான மாதிரி தேர்வுகள் என எந்த ஒரு பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் தானாகவே தயாராகியுள்ளார். சாதாரணமாக நம் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய நவீன தொழில்நுட்பங்களை தான் பயன்படுத்தியிருக்கிறார் . அனைவரும் புத்தகங்களையும் ஆன்லைன் வீடியோக்களையும் கொண்டு படித்து வந்திருந்த சூழலில் இவர் கூகுளின் ஜெமினி போன்ற ஏஐ கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார்.
இதன் மூலம் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான முன் தயாரிப்பு திட்டங்களை உருவாக்கிக் கொண்ட அவர் தேர்வுக்கு படிப்பது, மாதிரி தேர்வுகளை எழுதுவது உள்ளிட்டவற்றுக்கும் ஜெமினி ஏஐ போன்ற செயலிகளை பயன்படுத்தி இருக்கிறார் . நேர்காணலகளுக்கு ஏஐ மூலமாகவே பயிற்சி பெற்று வந்திருக்கிறார் . நேரடியாக ஒரு நேர்காணலில் எப்படி இரண்டு மூன்று பேர் அமர்ந்து கேள்வி கேட்பார்களோ அதே போலவே பிராம்ப்ட் கொடுத்து சாட் பாட்டுகளை தன்னிடம் நேர்காணல் நடத்த செய்திருக்கிறார்.
ஒவ்வொரு நேர்காணலின் முடிவிலும் இவர் அளித்த பதில்கள் எப்படி இருந்தது என்பது குறித்து ஏஐ மூலமே இவர் பகுப்பாய்வும் செய்திருக்கிறார் .இது அவருக்கு பெருமளவிலான நேரத்தை மிச்சப்படுத்தியது அதுமட்டுமின்றி எந்த விஷயங்களில் எல்லாம் இவருக்கு இன்னும் தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கும் இந்த தேர்வுகளும் மாதிரி நேர்காணல்களும் உதவியாக இருந்திருக்கின்றன.
ஒரு கோச்சிங் சென்டருக்கு செல்கிறோம் என்றால் நேரத்திற்கு செல்ல வேண்டும் ஒரு கணிசமான தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும் . ஆனால் ஏஐ கருவிகளை பயன்படுத்தும் போது அந்த பிரச்சனை கிடையாது. நாம் நினைத்த நேரத்தில் நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கலாம் , பயிற்சி பெறலாம் . இதுதான் இவருக்கு மிகப்பெரிய ஒரு சாதகமாக தென்பட்டது .
2022 ஆம் ஆண்டு முதலில் தேர்வு எழுதிய முதல் தேர்விலேயே இவர் அனைத்து இந்திய தரவரிசையில் 743-வது இடம் பிடித்தார் இதனை அடுத்து 2024 ஆம் ஆண்டு நடந்த தேர்வில் 19ஆவது இடத்திற்கு முன்னேறினார். தற்போது ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக உருவெடுத்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் அதற்கு படிக்க வேண்டும் என எண்ணுபவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை நம் கைகளிலேயே இருக்கும் போனில் கிடைக்கும் ஏஐ கருவிகளை சரியாக பயன்படுத்தினாலே போதும் என்பதற்கு முன் உதாரணமாக மாறியிருக்கிறார்.