இந்தியாவில் சொந்தமாக வீடு வாங்கக்கூடிய பெரும்பாலான மக்கள் வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கி தான் சொந்த வீடு என்னும் கனவையே நிறைவேற்றுகிறார்கள். வீட்டு கடன் வாங்கி விட்டோம் என்றால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இஎம்ஐ தொகை கட்டாயம் வங்கிகளுக்கு திரும்ப செலுத்தியாக வேண்டும்.
வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மாதம் தோறும் அவர்களின் சம்பளத்தில் கணிசமான தொகை இஎம்ஐ -க்கு சென்றுவிடும். பொதுவாக நம் வாங்க கூடிய வீட்டுக் கடனை திரும்ப செலுத்தும் போது நாம் வாங்கிய கடனை விட பல மடங்கு அதிகமான தொகை தான் திரும்ப செலுத்தி இருப்போம்.நாம் வாங்கிய கடன் தொகைக்கு நிகராக அல்லது அதைவிட அதிகமாக தான் வட்டியை வழங்கியிருப்போம் . இந்த சூழலில் வீட்டு கடன் வாங்கியவர்கள் எப்படி வட்டியை சேமிக்கலாம் முன்கூட்டியே எப்படி வீட்டுக் கடனை அடைக்கலாம் என்பது குறித்து தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம் .

உங்களுடைய வீட்டு கடனுக்கான வட்டியை குறைப்பதற்கு மூன்று வழிமுறைகள் இருக்கின்றன . ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு இஎம்ஐ கூடுதலாக சேர்த்து செலுத்துவது , அதாவது 12 மாதங்கள் என இல்லாமல் 13 மாத இஎம்ஐ யாக செலுத்துவது . இரண்டாவது வழிமுறை இஎம்ஐ தொகையை 7 – 8 சதவீதமாக உயர்த்துவது. அடுத்ததாக ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஒரு இஎம்ஐ அத்தோடு சேர்ந்து இஎம்ஐ தொகையையும் படிப்படியாக உயர்த்துவது .
உதாரணமாக 75 லட்சம் ரூபாயை ஒரு நபர் வீட்டுக் கடனாக வாங்குகிறார் எட்டு சதவீத வட்டியில் அவருக்கு கடன் கிடைக்கிறது. அடுத்து 25 ஆண்டுகளுக்கு அவர் அதனை திரும்ப செலுத்த வேண்டும் எனும்போது அவருடைய மாதாந்திர இஎம்ஐ தொகை 57,742 ரூபாய் . 25 ஆண்டுகால முடிவில் அவர் வாங்கிய கடன் 75 லட்சம் தான் அந்த 75 லட்சம் அத்துடன் சேர்த்து கூடுதலாக 98 லட்சத்தை வட்டியாக மட்டுமே செலுத்தி இருப்பார்.
ஆனால் நாம் கூறக்கூடிய இந்த மூன்று வழிமுறைகளை பின்பற்றினால் இந்த வட்டி தொகையில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிக்க முடியும் . உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் 12 இஎம்ஐ என இல்லாமல் ஒரு இஎம்ஐ கூடுதலாக சேர்த்து 13 இஎம்ஐ செலுத்தும் போது மொத்தமாக கடனை திரும்ப செலுத்தக்கூடிய காலத்தில் 7 ஆண்டுகள் வரை குறையும் வட்டியில் 25 லட்சம் வரை சேமிக்க முடியும்.
அதேபோல மாதந்தோறும் நாம் செலுத்தக்கூடிய இஎம்ஐ தொகையை 7 – 8 சதவீதம் என்ற விகிதத்தில் உயர்த்தி வந்தால் கடன் திரும்ப செலுத்தக்கூடிய ஆண்டுகளில் 13 ஆண்டுகள் வரை குறையும் நாம் திரும்ப செலுத்தக்கூடிய வட்டி தொகையில் சுமார் 49 லட்சம் வரை சேமிக்கலாம். அதுவே ஒவ்வொரு ஆண்டும் 13 இஎம்ஐ மற்றும் இஎம்ஐ தொகையை 7 – 8 சதவீதமாக உயர்த்தும்போது கடன் திரும்ப செலுத்தும் 25 ஆண்டுகளை நாம் 15 ஆண்டுகள் வரை குறைக்க முடியும் . நாம் திரும்ப செலுத்தக்கூடிய வட்டி தொகையில் 55 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.
ஸ்டேபில் இன்வஸ்டர்ஸ் நிறுவனர் தேவ் ஆசிஸ் இந்த தகவலை எக்னாமிக் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். எனவே வீட்டு கடன் வாங்கியவர்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே இந்த உத்திகளை பயன்படுத்த தொடங்கி விட்டால் கணிசமான அளவு வட்டி தொகையை சேமிக்க முடியும் என அறிவுரை வழங்குகிறார்.


