தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும், முதலீட்டாளர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் தங்கத்தின் விலை குறித்த பேச்சுதான் ஆதிக்கம் செலுத்துகிறது. பண்டிகை கால விற்பனை முடிந்துவிட்ட நிலையில், தங்கத்தின் விலை இனி குறையுமா? அல்லது உயருமா? என்ற கேள்விக்கு, சர்வதேச நிதி நிறுவனமான HSBC ஆச்சரியமான பதிலை தந்துள்ளது.
தங்கம் தற்போது உச்சம் தொட்டு விற்பனையாகி வரும் நிலையில், இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்கனவே ஒரு அவுன்ஸ் 4,300 அமெரிக்க டாலரை தாண்டியுள்ள நிலையில், அக்டோபர் 18ஆம் தேதி நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 4,362 டாலருக்கு வர்த்தகமானது.

2026-க்குள் 5,000 டாலரை தொடும் தங்கம் : தீபாவளிக்கு பிந்தைய காலத்திலும் தங்கம் தனது வேகத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்று HSBC கூறியுள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 5,000 டாலரை எட்டக்கூடும் என்றும் கணித்துள்ளது. இது தற்போதைய விலையில் இருந்து கிட்டத்தட்ட 1,000 டாலர் அதிகரிக்கும் வாய்ப்பை குறிக்கிறது.
உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற நிலை மற்றும் விரைவான லாபத்திற்காக இல்லாமல், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி நீண்ட கால முதலீட்டாளர்கள் சந்தையில் நுழைவதுமே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக HSBC கூறுகிறது.
முன்னதாக, 2025ஆம் ஆண்டிற்கான சராசரி தங்க விலை 3,355 டாலராக இருக்கும் என்று HSBC மதிப்பிட்டிருந்தது. ஆனால், தற்போது இது 3,455 டாலராக திருத்தப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிற்கான மதிப்பீடு 3,950 டாலரில் இருந்து 4,600 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்..?: தங்கத்தின் விலை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கள் தங்க இருப்புகளை அதிகரித்து வருவது, தங்கத்தின் விலையைப் பிரதிபலிக்கும் பங்குச் சந்தை பரிவர்த்தனை நிதிகளில் (ETFs) முதலீடு அதிகரிப்பது, மேலும் அமெரிக்க வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை தங்கத்தின் தேவையை வலுப்படுத்துகின்றன.
சமீபத்தில், ஸ்பாட் தங்கம் டிசம்பர் 2008ஆம் ஆண்டுக்கு பிறகு மிக விரைவான உயர்வுகளில் ஒன்றைப் பதிவு செய்து, 4,300 டாலரை கடந்தது. அதேபோல், 2026ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை விலை உயர்ந்த நிலையிலேயே இருக்கும் என்று HSBC கணித்துள்ளது. அதன் பின்னர், அந்த ஆண்டின் பிற்பகுதியில் சில விலை திருத்தங்கள் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளது.
HSBC மட்டும் அல்லாமல், பாங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் சொசைட்டி ஜெனரல் போன்ற உலகளாவிய வங்கிகளும் வரும் ஆண்டில் தங்கம் ஒரு அவுன்ஸ் 5,000 டாலரை தொடும் என்று கணித்துள்ளன. முன்னணி வங்கிகள் அனைத்தும் தங்கத்தின் விலையில் நீடித்த வளர்ச்சியை எதிர்பார்ப்பதால், தீபாவளிக்குப் பிறகு விலை பெரிய அளவில் சரிய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.