இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி தான் இன்று பல கோடி மக்களுக்கு அதிகப்படியான சம்பளமும், பெரும் தொகையில் ஐபிஓ-வும் வெளியாகி வருகிறது. ஆனால் எப்போதும் இல்லாத வகையில் இந்திய ஸ்டார்ட்அப் துறையில் இந்த வருடம் மோசமான நிலையை எட்டியுள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.
2025 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையில் இந்தியாவில் சுமார் 11,223 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவலை டிராக்சன் நிறுவனத்தின் ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் அக்டோபர் மாதம் மட்டுமே ஆன நிலையில் இன்னும் 2 மாதங்களில் எத்தனை நிறுவனங்கள் மூடப்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

இதுவே 2024 ஆம் ஆண்டில் கணக்கிட்டால் 8,649 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவீதம் அதிகமாகும்.
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மூடலுக்கு முக்கியமான காரணமாக இருப்பது, அதன் பொருளாதார சவால்கள், சந்தைக்கு ஏற்ற அல்லது தேவையான சேவையை உருவாக்க முடியாமல் தோல்வி அடைவது முக்கிய காரணமாக உள்ளது.
இந்த ஆண்டு ஹைக், பீப்கார்ட், ஆஸ்ட்ரா, ஓம் மொபிலிட்டி, Code Parrot, Blip, Subtl AI, Otipy, Log 9 Material, ANS Commerce போன்ற முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் ஊழியர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர்.
டிராக்சன் இணை நிறுவனர் நேஹா சிங் பைனான்ஸ் எக்ஸ்பிரஸ்-க்கு அளித்த பேட்டியில், இந்த ஆண்டு ஈகாமர்ஸ் துறையில் மட்டும் 5,776 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து என்டர்பிரைஸ் சாப்ட்வேர் துறையில் 4,174 நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது, SaaS பிரிவில் இருக்கும் 2,785 நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது.
மேலும் பேஷன் டெக் பிரிவில் 840 நிறுவனங்களும், மனிதவள தொழில்நுட்பம் பிரிவில் 846 நிறுவனங்களும், எட்டெக் துறையில் 549 நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து ஹெல்த்கேர் புக்கிங் பிரிவில் 762 நிறுவனங்களும், இன்வெஸ்ட்மென்ட் டெக் 579 நிறுவனங்களும், இணைய அடிப்படையிலான பிராண்டுகள் 817 நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்த துறைகளில் வாடிக்கையாளர்களை பெறுவதற்கு அதிகப்படியான செலவுகள் ஆகும் காரணத்தாலும், வருவாய் பெற முடியாமல் தவிக்கும் காரணத்திற்காகவும், நிதி திரட்டுவதில் உருவான நெருக்கடி ஆகியவை இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதேவேளையில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சந்தை தேவையை உறுதி செய்யாமல் புதிய ப்ராடெக் உருவாக்கி, விரைவாக விரிவாக்கம் செய்கின்றன. இது செலவு மிருந்த அமைப்பாகும், இதனால் நிறுவனத்தை துவங்கி குறுகிய காலக்கட்டத்திலேயே மூட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஏராளமான மக்கள் இருந்தனர், இதனால் ஒரு நிறுவனம் ப்ராடெக்ட் உருவாக்கி பல வர்த்தக மாடலில் முயற்சி செய்ய ஏதுவான சூழ்நிலை இருந்தது. ஆனால் 2025ல் அது சாத்தியமில்லை, ஏனெனில் சீட் பண்டிங் செய்வோர் தெளிவான வர்த்தக மாடல் மற்றும் வளர்ச்சி ஆதாரத்தை கோருகின்றனர். இந்த நிலையை எட்டுவதற்கு பெரிய அளவிலான நிதி தேவை உள்ளது, இதை திரட்ட முடியாத நிறுவனங்கள் மூடப்படுகிறது.
டிராக்சன் தரவுகளின் படி, 2025 இல் ஏழு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள் மூடப்பட்டுள்ளதை காட்டுகின்றன, இது 2024ல் வெரும் ஒரு நிறுவனமாக இருந்தது.
