ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வரக்கூடிய சாட் ஜிபிடி, கூகுளின் ஜெமினி ஏஐ, பெர்பிளெக்சிட்டி ஏஐ ஆகிய நிறுவனங்கள் இந்திய பயனர்களை தங்கள் வசம் ஈர்ப்பதில் பெரிய அளவில் போட்டி போட்டு வருகின்றன.
உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கக்கூடிய ஒரு நாடு ,அதிக அளவில் மக்கள் செல்போனை பயன்படுத்தும் ஒரு நாடாகவும் இந்தியா இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் அதிக பயனாளர்களை பெற வேண்டும் என்பதில் அமெரிக்க டெக் நிறுவனங்கள் கடுமையான போட்டியில் இருந்து வருகின்றன. ஏற்கனவே பெர்பிளெக்சிட்டி நிறுவனம் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக பெர்பிளெக்சிட்டி பிரீமியம் சேவையை வழங்கி இருக்கிறது.

கூகுள் ஜெமினி ஏஐ செயலியை இந்திய கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவித்தது. இந்த சூழலில் சாட் ஜிபிடி நிறுவனமும் இந்தியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியர்கள் சாட் ஜிபிடி செயலியை ஓராண்டுக்கு இலவசமாக பயன்படுத்தலாம்.
சாட்ஜிபிடி நிறுவனம் தங்களுடைய சாட் ஜிபிடி கோ சேவையை இந்தியர்கள் ஓராண்டு காலத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்து இருக்கிறது. ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியர்கள் நவம்பர் நான்காம் தேதியிலிருந்து அடுத்த ஓராண்டு காலத்திற்கு சாட் ஜிபிடி கோ சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
வழக்கமாக இதனை பயன்படுத்த மாதம் 399 ரூபாய் சந்தா செலுத்த வேண்டும். ஆனால் அடுத்த ஓராண்டுக்கு எந்த சந்தாவும் இல்லாமல் இதனை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் சாதரணமாக பயன்படுத்தக்கூடிய சாட் ஜிபிடியை விட சாட் ஜிபிடி கோ சேவையில் நமக்கு பல்வேறு பிரிமியம் வசதிகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு எத்தனை இமேஜ்கள் வேண்டும் ஆனாலும் இதில் உருவாக்கி கொள்ளலாம் ,நீண்ட மெமரி கொண்டது. சாட் ஜிபிடி 5 மாடலை அடிப்படையாக கொண்டு அனைத்து பிரீமியம் சேவைகளையும் வழங்கும் திறன் கொண்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தான் ஓபன் ஏஐ இந்தியாவில் சாட் ஜிபிடி கோ சேவையை அறிமுகம் செய்தது. அதிக எண்ணிக்கையில் இதனை கிரியேட்டிவ்வான முறையில் ஆர்வத்துடன் இந்தியர்கள் பயன்படுத்ததாக தெரிவித்திருக்கும் ஓபன் ஏஐ நிறுவனம் இந்தியர்களுக்கு ஓராண்டு காலத்திற்கு இதனை இலவசமாக வழங்குகிறோம் என கூறியுள்ளது.
இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாத காலத்திலேயே இந்தியாவில் சந்தா செலுத்தி பயன்படுத்தக்கூடிய பயனாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாக கூறியுள்ள ஓபன் ஏஐ நிறுவனம் இதனால் தான் ஓராண்டு காலத்திற்கு அனைவருக்கும் இதனை இலவசமாக வழங்க முடிவு செய்து இருக்கிறோம் என தெரிவித்துள்ளது.
உலக அளவில் சாட் ஜிபிடியை அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிக பயன்படுத்தும் நாடாக இந்தியா இருக்கிறது. சாட் ஜிபிடி -இன் இரண்டாவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு சந்தையாக இந்தியா திகழ்ந்து வருகிறது.


