இனி வரும் காலத்தில் ஏஐ தான் எல்லாமே என்ற நிலை வந்துவிட்டது, ஐடி ஊழியர்கள் எல்லாம் இனி புது புது கோடிங் மொழியை கற்கதேவையில்லை, எப்படி ஏஐ உடன் பேசுவது அதாவது ப்ராம்ட் இன்ஜினியரிங் தெரிந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது.
இப்படியிருக்கையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் எந்த அளவுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது, இதன் மூலம் எந்த அளவுக்கு வர்த்தகத்தை பெறுகிறது என்பது பெரும் கேள்வியாகவே இருந்து வந்தது.

இதன் துவக்க புள்ளியாக செப்டம்பர் காலாண்டு முடிவில் ஹெச்சிஎல் முதல் இந்திய நிறுவனமாக ஏஐ பிரிவு வர்த்தகம் மூலம் 100 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவித்தது. இதை தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனமும் ஏஐ பிரிவு வர்த்தகத்தை பற்றி முக்கியமான தகவலை வெளியிட்டு உள்ளது.
இன்போசிஸ் தற்போது உலகளாவில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஜெனரேட்டிவ் ஏஐ (ஜென் ஏஐ) திட்டங்களையும், 200க்கும் மேற்பட்ட ஏஜென்டிக் ஏஐ சேவைகளை அளித்து வருவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பைலட் கட்டத்தைத் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளவுக்கு மெருகேற்றியுள்ளது என்று இன்போசிஸ் தலைமை டெலிவரி அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் தனது டோபாஸ் ஏஐ தளம் மற்றும் சொந்தமாக உருவாக்கப்பட்ட சிறு மொழி மாதிரிகளின் (SLM) உதவியுடன், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு துவக்க நிலை சேவைகள் முதல் அதிநவீன ஆட்டோமேஷன் சேவைகள் வரையில் ஏஐ வாயிலாக அளித்து வருகிறது. இன்போசிஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பதற்காக 4 Small Language Models (SLMs) உருவாக்கியுள்ளது.
இன்போசிஸ்-ன் ஏஜென்டிக் ஏஐ சேவைகள் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 5 முதல் 15 சதவீத உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளதாகவும் இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் சாப்ட்வேர் டெவலப்பர்கள் ஜென் ஏஐ மூலம் சுமார் 2.5 கோடி வரிகளுக்கும் மேற்பட்ட கம்பியூட்டர் கோடிங்-ஐ உருவாக்கியுள்ளனர். பல்வேறு ஏஜென்ட் இன்வாய்ஸ் ஆட்டோமேஷன் சேவை மூலம் 50 மில்லியன் டாலர் கூடுதல் நிதி ஆதாரத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது