நண்பருக்கோ, உறவினருக்கோ நம்பிக்கையின் அடிப்படையில் பணம் கொடுத்திருப்போம். ஆனால், திருப்பிக் கேட்டால் பதில் இருக்காது; போன் செய்தால் எடுக்க மாட்டார்கள். சிலர் பணத்தைத் திருப்பிக் கேட்கும்போது, “என் பணத்தை வாங்கிக் கொடுத்தால் போதும்!” என்று கோபத்தில் சமூக வலைதளங்களில் கடன் வாங்கியவரின் புகைப்படத்தைப் பதிவிடுவதும் உண்டு.
அப்படிச் செய்யலாமா? கடன் கொடுத்தவருக்கும், கடன் வாங்கியவருக்கும் சட்டம் வழங்கும் உரிமைகள் என்னென்ன?
.<div><div class="bigfact-title">கடன் கொடுத்தவர் என்ன செய்யலாம்?</div><div class="bigfact-description"></div></div>.
முதலில், கடன் கொடுத்ததற்கான ஆதாரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். வங்கிப் பணப் பரிமாற்ற விவரங்கள், ரசீதுகள், கடன் ஒப்பந்தம், பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறிய குறுஞ்செய்திகள், WhatsApp உரையாடல்கள் போன்றவை உதவக்கூடும்.
வங்கிப் பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரம் மட்டும் இருந்தால் போதாது; அந்தப் பணம் கடனாகக் கொடுக்கப்பட்டது, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற புரிதல் இரு தரப்புக்கும் இருந்தது என்பதையும் நிரூபிக்க வேண்டியிருக்கலாம். எனவே, கடன் கொடுக்கும்போதே எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் அல்லது குறைந்தபட்சம் கடன் பெற்றவர் அளிக்கும் ஒப்புதல் செய்தியைப் பெற்றுக்கொள்வது நல்லது.
கடன் வாங்கியவரிடம் எழுத்துப்பூர்வமாகப் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்கலாம். அதற்கும் பலன் இல்லையென்றால், வழக்கறிஞர் மூலம் சட்ட நோட்டீஸ் அனுப்பலாம். தொடர்ந்து பணம் கிடைக்கவில்லை என்றால், உரிய சிவில் நீதிமன்றத்தில் பணம் வசூலிக்க வழக்குத் தொடரவும் முடியும்.
.
கடன் ஒப்பந்தம், உறுதிமொழிச் சீட்டு (Promissory Note) அல்லது பிற ஆவணங்கள் இருந்தால், அவற்றின் அடிப்படையில் பொருந்தக்கூடிய சட்ட நடைமுறையையும் தேர்வு செய்யலாம். சில குறிப்பிட்ட ஆவணங்களின் அடிப்படையில் விரைவான நடைமுறையில் வழக்குத் தொடர வாய்ப்பும் இருக்கலாம்
அவமானப்படுத்தினால் சட்டம் என்ன சொல்கிறது?
“பணம் கொடுக்கவில்லை என்றால் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்!” என்று மிரட்டுவதோ, ஒருவரின் புகைப்படத்தைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவமானப்படுத்துவதோ சரியான வழியல்ல.
பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS)-ன் பிரிவு 351, குற்றவியல் மிரட்டல் தொடர்பானது. ஒருவரின் உடல், சொத்து அல்லது நற்பெயருக்குச் சேதம் ஏற்படுத்துவதாக மிரட்டி, அதன் மூலம் அவருக்குப் பயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அல்லது அவர் சட்டப்படி செய்ய வேண்டிய அவசியமில்லாத செயலைச் செய்யவோ, செய்ய உரிமையுள்ள செயலைச் செய்யாமல் இருக்கவோ கட்டாயப்படுத்தும் நோக்கத்துடன் மிரட்டினால் இப்பிரிவு பொருந்தலாம்.
பிரிவு 352, அமைதிக்குக் குலைவு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அல்லது அத்தகைய விளைவு ஏற்படும் என்று தெரிந்தே ஒருவரை அவமதித்துக் கிளர்ச்சியூட்டும் செயல்களைக் குறிக்கிறது.
.
பிரிவு 356, அவதூறு தொடர்பானது. ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் அல்லது அவ்வாறு ஏற்படும் என்று தெரிந்தே அவரைப் பற்றிய அவதூறான தகவலைப் பேசுவது, எழுதுவது அல்லது புகைப்படம் உள்ளிட்ட காட்சிகள் மூலம் வெளியிடுவது இப்பிரிவின் கீழ் வரலாம்.
ஆனால், ஒவ்வொரு கடுமையான வார்த்தையும், பணத்தைத் திருப்பிக் கேட்பதும் அல்லது கடன் நிலுவையில் இருப்பதாகக் கூறுவதும் தானாகவே குற்றமாகிவிடாது. சம்பவத்தின் தன்மை, வெளியிடப்பட்ட தகவலின் உண்மைத் தன்மை, வெளியிடப்பட்ட விதம், நோக்கம் மற்றும் சட்டத்தில் உள்ள விதிவிலக்குகள் ஆகியவை கவனிக்கப்படும்.
மேலும், நண்பருக்கோ உறவினருக்கோ ஒருமுறை கடன் கொடுப்பதும், தொடர்ந்து வட்டிக்குக் கடன் கொடுப்பதைத் தொழிலாகச் செய்வதும் ஒன்றல்ல. தொடர்ந்து கடன் வழங்குவதைத் தொழிலாக மேற்கொள்பவர்களுக்கு, தமிழ்நாட்டில் பொருந்தக்கூடிய பணக்கடன் வழங்குதல் தொடர்பான சட்டங்களும், அதிக வட்டி வசூலிப்பதற்கு எதிரான சட்டங்களும் பொருந்தக்கூடும்.
.
வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கும் உரிமைகள் உண்டு!
.
வங்கியில் கடன் வாங்கியவர்கள் தவணையைச் செலுத்தத் தாமதித்துவிட்டால், கடன் வசூலிக்கும் முகவர்கள் மிரட்டவோ, துன்புறுத்தவோ, பொதுவில் அவமானப்படுத்தவோ முடியாது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களின்படி, வங்கிகள், NBFC-கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களும் அவற்றின் கடன் வசூல் முகவர்களும், கடன் வசூலிப்பதற்காக மிரட்டல், உடல் ரீதியான அல்லது வாய்மொழியான துன்புறுத்தல், பொதுவில் அவமானப்படுத்துதல், கடன் வாங்கியவரின் குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் தனியுரிமையில் தலையிடுதல், அச்சுறுத்தும் செய்திகள் அனுப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. தொடர்ந்து அழைத்துத் தொந்தரவு செய்வதும், காலை 8 மணிக்கு முன்பும் இரவு 7 மணிக்குப் பிறகும் கடன் வசூலிப்பதற்காக அழைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய தொந்தரவுகளைச் சந்தித்தால், முதலில் சம்பந்தப்பட்ட வங்கியின் குறைதீர்க்கும் பிரிவில் புகார் அளிக்கலாம். தீர்வு கிடைக்கவில்லை என்றால், வங்கியின் பதில் கிடைக்காமல் 30 நாட்கள் கடந்தாலோ அல்லது கிடைத்த பதிலில் திருப்தி இல்லையென்றாலோ, RBI-யின் பொருந்தக்கூடிய குறைதீர்ப்பு வழிமுறையை அணுகலாம்.
.
இந்த வழிகாட்டுதல்கள் RBI-யின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட நிதி நிறுவனங்களுக்கும் அவற்றின் முகவர்களுக்கும் பொருந்தும்; நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு இடையிலான தனிப்பட்ட கடன் பிரச்சினைகளுக்கு இவற்றை நேரடியாகப் பொருத்த முடியாது.
நீதிமன்றத்தை அணுக முடியுமா?
ஆம். கடன் கொடுத்தவர், பணம் கொடுத்ததற்கான ஆதாரங்களுடன் உரிய சிவில் நீதிமன்றத்தை அணுகலாம். சிவில் நடைமுறைச் சட்டம், 1908 (CPC)-ன் Order VII Rule 1, வழக்கு மனுவில் இடம்பெற வேண்டிய விவரங்களையும், Rule 2, பணம் வசூலிக்கும் வழக்கில் கோரப்படும் தொகையைக் குறிப்பிடுவதையும், Rule 7, கோரும் நிவாரணத்தைத் தெளிவாகக் குறிப்பிடுவதையும் பற்றிக் கூறுகின்றன.
ஆனால், பணம் வசூலிக்கும் வழக்கை எப்போது தொடர வேண்டும் என்பதில் காலவரம்புச் சட்டமும் முக்கியமானது. வரம்புச் சட்டம், 1963-ன் அட்டவணையில் உள்ள 19 மற்றும் 21-வது கட்டுரைகளின்படி, சாதாரணமாகக் கடன் கொடுத்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் பணம் வசூலிக்கும் வழக்கைத் தொடர வேண்டும். கடனைத் திருப்பிக் கேட்ட பிறகுதான் மூன்று ஆண்டுகள் தொடங்கும் என்று எல்லா வழக்குகளிலும் கருத முடியாது. கடன் ஒப்பந்தத்தின் தன்மை, திருப்பிச் செலுத்த வேண்டிய நிபந்தனைகள், உறுதிமொழிச் சீட்டு போன்ற ஆவணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து காலவரம்பு மாறலாம்.
மேலும், காலவரம்பு முடிவடைவதற்கு முன்பு கடன் வாங்கியவர் எழுத்துப்பூர்வமாகக் கடன் பொறுப்பை ஒப்புக்கொண்டால், பிரிவு 18-ன்படி புதிய காலவரம்பு தொடங்கலாம். அதேபோல், சட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, காலவரம்பு முடிவதற்கு முன்பு கடனில் ஒரு பகுதியைச் செலுத்தியிருந்தாலும், பிரிவு 19-ன்படி புதிய காலவரம்பு கணக்கிடப்படலாம்.
முக்கியமாக, கடன் கொடுத்தவருக்குப் பணத்தைச் சட்டப்படி திரும்பப் பெற உரிமை உண்டு; அதற்காகக் கடன் வாங்கியவரை மிரட்டவோ, அவமானப்படுத்தவோ உரிமை கிடையாது. அதேபோல், கடன் வாங்கியவரும் தனது கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. கடன் என்பது பணம் தொடர்பான பிரச்சினை; ஒருவரின் கண்ணியத்தைப் பறிப்பதற்கான உரிமம் அல்ல!
.'’பெற்றோரைப் பராமரிக்க மறுக்கும் பிள்ளைகள்'' உத்தரவை மதிக்காவிட்டால்… | சட்டம் சொல்வது என்ன? – 15








