இந்திய ஏற்றுமதி துறையில் எப்போதும் இரண்டாவது இடத்தில் இருக்கும் கச்சா எண்ணெய் பிரிவு இந்த ஆண்டு முதல் முறையாக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு 2வது இடத்தை எலக்ட்ரானிக்ஸ் பிரிவு பிடித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாத காலத்தில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு ஏற்றுமதி 42 சதவீதம் உயர்ந்து 22.2 பில்லியன் டாலராக உள்ளது.
இப்படி இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறை யாரும் எதிர்பார்க்காத வகையில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இத்துறையில் L&T இறங்க முடிவு செய்துள்ளது. இப்படி டாடா குழுமம் பல துறையில் இயங்கி எலக்ட்ரானிக்ஸ் துறையில் இறங்கியதோ, அதேபோல் L&T தற்போது இத்துறையில் இறங்க முடிவு செய்துள்ளது. இதற்காக L&T தேர்வு செய்துள்ள இடம் சென்னை என்பது தான் மகிழ்ச்சியூட்டும் விஷயம்.

இந்தியாவின் முன்னணி உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ – L&T, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தித் துறையில் நுழைய முடிவு செய்துள்ளதை தொடர்ந்து சென்னை அருகே 200 ஏக்கர் நிலத்தை பெற தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தளம் கொண்டுள்ளது தமிழ்நாடு தான், இத்துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது L&T நிறுவனமும் இடம்பெற உள்ளது.
சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான L&T நிறுவனம், ஏற்கனவே எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்புடைய துணை நிறுவனங்களை கொண்டுள்ளது. இப்போது சென்னையில் அமைக்க திட்டமிட்டுள்ள 200 ஏக்கர் தொழிற்சாலை மூலம் முழு உற்பத்தி சங்கிலியை உருவாக்கி, ஒருங்கிணைந்த உற்பத்தியாளராக மாற உள்ளது L&T.
டாடா எலக்ட்ரானிக்ஸ் எப்படி ஆப்பிள் உற்பத்தியாளராக மாறியதோ அதேபோல் L&T இதே பாதையில் பயணிக்க உள்ளது. இன்றைய வர்த்தகதத்தில் L&T நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.32 சதவீதம் சரிந்து 3,960 ரூபாயாக உள்ளது, 2025ஆம் ஆண்டில் இதுவரையில் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
L&T தற்போது இன்ஜினியரிங், கட்டுமானம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்போது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் உதிரிபாக உற்பத்தியை தனது போர்ட்போலியோவில் சேர்க்க முயன்று வருகிறது.
L&T தற்போது பாதுகாப்பு மற்றும் விமானத் துறையில் சில முக்கியமான மின்னணு அமைப்புகளை தயாரித்து வரும் வேளையில், இந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பு மற்றும் விமானத் துறைக்கான உதிரிபாக உற்பத்தியில் கவனம் செலுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் நீட்சியாக L&T மின்னணு உற்பத்தி சேவை (EMS) தாண்டி, செமிகண்டக்டர் உற்பத்திக்கும் இந்த நிலத்தைப் பயன்படுத்தலாம் என்றும் கணிப்புகள் நிலவுகிறது.
முக்கிய கேள்வி
- ஆனால் L&T இந்த மாபெரும் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை தனியாக இயக்குமா அல்லது உலகளாவிய உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் உடன் இணைந்து செயல்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது.
- இதேபோல் தற்போது உலகளாவிய போட்டியில் L&T இத்துறையில் எப்படி விரைவாக வளர்ச்சி அடைய முடியும் என்ற கேள்வியும் உள்ளது.
- இதோடு டாடா எலக்ட்ரானிக்ஸ் போல ஒப்பந்த உற்பத்தியாக L&T மாறுமா அல்லது தனிப்பட்ட பாதையை உருவாக்குமா என்று தெரியவில்லை.
