இந்தியர்களின் முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த ஆதார் அட்டை பயன்படுத்தும் முறையும் பல மாற்றங்களை கண்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து ஆதார் அட்டை பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றங்களை அரசு நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது.
இந்தியாவில் ஆதார் அட்டையை தனித்துவ அடையாள அமைப்பான யுஐடிஏஐ அமைப்புதான் மேலாண்மை செய்து வருகிறது. இந்த அமைப்பு நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து பல்வேறு மாற்றங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்களுடைய பெயர், முகவரி ,பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவற்றை ஆன்லைன் வாயிலாகவே இனி மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக எந்த ஒரு ஆவணங்களையும் அவர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை.

யுஐடிஏஐ அமைப்பு தன்னுடைய அமைப்புகளையே பெரிய அளவில் அப்டேட் செய்திருக்கிறது. இதன்படி நம்முடைய விவரங்களை மாற்ற வேண்டும் என நாம் விண்ணப்பிக்கும் போது அரசு தகவல் தளங்களான பான் கார்டு, பாஸ்போர்ட் ,ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி ஆவணங்கள் ஆகியவற்றிலிருந்து தானாகவே தகவல்களை எடுத்து சரிபார்த்துக் கொள்ளும் . எனவே நாம் எந்த ஒரு சப்போர்ட்டிங் ஆவணங்களையும் இதில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை .
இதற்கு முன்பு வரை நாம் ஆதார் செயலி வாயிலாக முகவரியை மட்டுமே வீட்டில் இருந்து மாற்றிக் கொள்ள முடியும். மற்ற தகவல்களை அப்டேட் செய்ய ஈ சேவை மையம் தான் செல்ல வேண்டும். ஆனால் இனி பெயர், பிறந்த தேதி ,மொபைல் எண் ஆகியவற்றையும் வீட்டிலிருந்து செயலி வாயிலாகவே மாற்றிக் கொள்ள முடியும். நம்முடைய கைவிரல் ரேகை, கருவிழி , புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்ற வேண்டுமென்றால் நாம் வழக்கம்போல ஆதார் சேவை மையங்களுக்கு தான் செல்ல வேண்டும்.
ஆதார் அப்டேட்டுகளுக்கான கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. பெயர், முகவரி ,பிறந்த தேதி ,மொபைல் எண், மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை மாற்றுவதற்கு இதற்கு முன்பு வரை ஐம்பது ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்ட நிலையில் அது 75 ரூபாய் என உயர்த்தப்பட்டிருக்கிறது . பயோமெட்ரிக் விவரங்களான கைவிரல், புகைப்படம், கருவிழி ஆகியவற்றை அப்டேட் செய்ய 125 ரூபாயாக கட்டணம் செலுத்த வேண்டும் இதற்கு முன்பு இது 100 ரூபாயாக இருந்து வந்தது .
குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் அப்டேட்டுகளுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. மேலும் பான் மற்றும் ஆதார் இணைப்பதற்கான கடைசி தேதியாக டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது .இந்த இடைப்பட்ட காலத்திற்குள் இதனை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள், டீமேட் கணக்குகள் உள்ளிட்டவை முடங்கி போகலாம்.


