இந்தியாவின் மிகப்பெரிய கமாடிட்டி வர்த்தக தளமான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX), இன்று காலை வர்த்தகம் துவங்கும் நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய முடியாமல் தவித்தது மட்டும் அல்லாமல் வர்த்தகம் செய்வதற்கான கதவுகள் 10 மணி வரையில் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக காலை 9 மணிக்கு தொடங்கும் எம்சிஎக்ஸ் வர்த்தகம், இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கும் என்று எம்சிஎக்ஸ் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் பின் 9.45 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டது, கடைசியாக 9.45 மணிக்கு வெளியான அப்டேட்டில் 10.00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் கமாடிட்டி பரிவர்த்தனை சந்தையில் 98 சதவீத பங்கை வைத்துள்ள எம்சிஎக்ஸ், தங்கம், வெள்ளி, எரிசக்தி, உலோகங்கள், வேளாண் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் பியூச்சர்ஸ் ஒப்பந்தங்களை முதலீடு செய்யவதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் வழங்குகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் இத்தகைய தருணத்தில் இந்த வர்த்தக தாமதம், வர்த்தகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எம்சிஎக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வர்த்தகம் காலை 10.00 மணிக்கு தொடங்கும். மேலும் வர்த்தகம் துவங்கப்படும் போது பேரிடர் மீட்பு தளத்திலிருந்து (DR) வர்த்தகம் தொடங்கப்படும். ஏற்பட்ட இடையூறுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று எம்சிஎக்ஸ் நிர்வாதம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் எம்சிஎஸ் நிர்வாகம் இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்த தன்மை அல்லது காரணம் குறித்து எந்த விவரமும் வெளியிடவில்லை. இருப்பினும், பேரிடர் மீட்பு தளத்திலிருந்து வர்த்தகத்தை தொடங்குவது மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களின் புக்கிங் தரவுகளில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது.
எம்சிஎஸ் தளத்தில் இது தான் முதல் முறையாக தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறதா என்றால் இல்லை, ஜூலை மாதம் எம்சிஎக்ஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வர்த்தகத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டது.
