இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக டாடா குழுமம் செயல்பட்டு வருகிறது. ஐடி சேவை தொடங்கி ஆட்டோமொபைல் , ஃபேஷன் என பல துறைகளிலும் வெற்றிகரமாக தொழில் புரிந்து வருகிறது.
டாடா குழும நிறுவனங்களின் மையமாக செயல்பட்டு வந்தவர் தான் ரத்தன் டாடா. இவர் இந்திய மக்களுக்கு நெருக்கமான தொழிலதிபராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு திடீரென ரத்தன் டாடா காலமானார். ரத்தன் டாடாவின் மறைவு நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் ரத்தன் டாடாவின் மறைவை அடுத்து டாடா குழும நிர்வாகங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

குறிப்பாக நோயல் டாடா பல அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார். டாடா குழுமம் 400 நிறுவனங்களையும் 30 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றை நிர்வகிக்கும் அமைப்பு தான் டாடா சன்ஸ். இது தான் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனம் ஆகும். இந்த டாடா சன்ஸ் அமைப்பில் டாடா குழும அறக்கட்டளைகள் தான் 66% பங்குகளை கொண்டுள்ளன.
எனவே டாடா அறக்கட்டளையில் நிகழும் எந்த ஒரு மாற்றமும் அனைத்து டாடா நிறுவனங்களிலும் நிர்வாகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த கூடும். அந்த வகையில் டாடா டிரஸ்ட் எனப்படும் அறக்கட்டளையில் இருந்து ரத்தன் டாடாவுக்கு நெருக்கமானவரான மெஹ்லி மிஸ்திரி வெளியேற்றப்படுவதாக மணி கண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது .

டாடா அறக்கட்டளைகளின் தலைவரான நோயல் டாடா, துணை தலைவர் வேணு சீனிவாசன், அறங்காவலர் விஜய் சிங் ஆகியோர் மெஹ்லி மிஸ்திரியை டாடா அறக்கட்டளையின் அறங்காவலராக மீண்டும் நியமனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். எனவே மெஹ்லி மிஸ்திரி டாடா டிரஸ்டில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது.
ரத்தன் டாடா மறைவுக்கு பின்னர் டாடா அறக்கட்டளையில் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் இடையே இப்படி கருத்து வேறுபாடு எழுவது இதுவே முதல்முறை என சொல்லப்படுகிறது. மற்ற அறங்காவலர்கள் மெஹ்லி மிஸ்திரியை நீட்டிக்க விரும்புவதாகவும் இந்த மூன்று பேர் தான் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
டாடா அறக்கட்டளையில், ஒரு நபர் மீண்டும் அறங்காவலராக நியமிக்கப்பட வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். தற்போது மூன்று பேர் மெஹ்லி மிஸ்திரி மிஸ்தரியை மறு நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர் டாடா அறக்கட்டளை அறங்காவலர் பதவியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.
மெஹ்லி மிஸ்திரி , மறைந்த ரத்தன் டாடாவுக்கு மிகவும் நெருக்கமானவர் நம்பகமான ஒரு நபர் . டாடா குழுமத்தின் உச்சபட்ச அதிகார பூர்வ அமைப்பான டாடா அறக்கட்டளையில் 2022ஆம் ஆண்டு மெஹ்லி மிஸ்திரிக்கு முக்கிய பொறுப்பு வழங்கி கௌரவித்தார் ரத்தன் டாடா. மெஹ்லி மிஸ்திரி ஷபூர்ஜி பாலோன்ஜி குடும்ப உறுப்பினர். இதற்கு முன்னர் இவரது சகோதரர் சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தில் உயர் பதவியில் இருந்தார். அவர் மறைவை அடுத்து மெஹ்லி மிஸ்திரி டாடா டிரஸ்டில் அறங்காவலராக நியமிக்கப்பட்டார்.


