அடுத்த அதிர்ச்சி.. 600 ஊழியர்கள் பணிநீக்கம்.. வேலையை இழந்தவர்களுக்கு மெட்டா அனுப்பிய கடைசி மெயில்..!


பிரபல சமூக ஊடக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா (Meta), மீண்டும் ஒரு பெரிய பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை, நிறுவனத்தின் முக்கியப் பிரிவான ‘மெட்டா சூப்பர் இன்டெலிஜென்ஸ் லேப்ஸ்’ பிரிவில் இருந்து சுமார் 600 ஊழியர்களை நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மெட்டாவின் இந்த ஆண்டின் தொடர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் சமீபத்திய ஒன்றாகும்.

ஏஐ-யில் கவனம் : மெட்டா தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க், கடந்த ஜனவரி மாதத்திலேயே சுமார் 3,600 பதவிகளை நீக்கும் திட்டத்தை அறிவித்திருந்தார். இது நிறுவனத்தின் உலகளாவிய ஊழியர்களில் சுமார் 5% ஆகும். இந்தப் பணிநீக்கங்கள் நிறுவனத்தின் முழு கவனத்தையும் செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் கண்ணாடிகள் மற்றும் சமூக ஊடகங்களின் எதிர்காலம் ஆகியவற்றில் செலுத்துவதற்காகவே என்று ஜக்கர்பெர்க் கூறினார்.

அடுத்த அதிர்ச்சி.. 600 ஊழியர்கள் பணிநீக்கம்.. வேலையை இழந்தவர்களுக்கு மெட்டா அனுப்பிய கடைசி மெயில்..!

அவர், 2025 ஆம் ஆண்டை தீவிரமான ஆண்டு என்று கூறி, ஊழியர்களின் செயல்திறனை மதிப்பிடுவதில் மிகவும் கண்டிப்புடன் செயல்படப் போவதாகவும், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாதவர்கள் விரைவாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மெட்டாவின் பணிநீக்கங்களை பொறுத்தவரை பல கட்டங்களாக நடைபெற்று வந்துள்ளன. முதல் கட்டம் பிப்ரவரி 10ஆம் தேதி அன்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் சுமார் 4,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.

இரண்டாம் கட்டம் ஏப்ரல் மாதத்தில் நடந்தது. இதில் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களை உருவாக்கும் ரியாலிட்டி லேப்ஸ் பிரிவில் இருந்து 100 ஊழியர்கள் நீக்கப்பட்டனர்.

600 ஊழியர்கள் பணிநீக்கம் : AI தொழில்நுட்பங்களை உருவாக்கும் சூப்பர் இன்டெலிஜென்ஸ் லேப்ஸ் பிரிவில் இருந்து தற்போது 600 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஜூன் மாதம் ஸ்கேல் ஏஐ (Scale AI) நிறுவனத்தில் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ததை தொடர்ந்து இந்த பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மெட்டாவின் தலைமை ஏஐ அதிகாரியாகப் பொறுப்பேற்ற அலெக்சாண்டர் வாங், இந்த ஆட்குறைப்பு செயல்பாடுகளைச் சீராக்குவதற்காகச் செய்யப்பட்டது என்று ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பில் விளக்கியுள்ளார். குழுவின் அளவைக் குறைப்பதன் மூலம், முடிவெடுப்பதற்கு தேவைப்படும் உரையாடல்கள் குறையும் என்றும் ஒவ்வொரு பணியாளரும் அதிகச் சுமையைத் தாங்குவதுடன், அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், இந்த பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினருக்கு நிறுவனத்திற்குள் புதிய பங்குகளை கண்டறிய ஆதரவு அளிப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

பொதுவாக, அமெரிக்க நிறுவனங்களில் 39% நிறுவனங்கள் இந்த ஆண்டு ஏற்கனவே பணிநீக்கம் செய்துள்ளன என்ற ஆய்வுக்கு மத்தியில், மெட்டாவின் இந்த நடவடிக்கை தொழில்நுட்ப உலகில் நீடித்து வரும் வேலைவாய்ப்பு கவலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *