உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்டின் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் இந்தி சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டின் இணை நிறுவனர் பில்கேட்ஸ். தற்போது பில்கேட்ஸ் உலக பணக்காரர்களில் ஒருவராகவும், பில்கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு தன்னுடைய அறக்கட்டளை மூலம் நிதி வழங்கி வருகிறார் . பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்தியாவிலும் கூட ஊட்டச்சத்து திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பில்கேட்ஸ் நிதி உதவி அளித்துள்ளார். எப்போதும் பிஸியாக இருக்க கூடிய பில்கேட்ஸ், இந்தியாவின் பிரபலமான ஒரு இந்தி சீரியலில் நடிக்கிறார் . முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான ஸ்மிருதி இராணி இந்தியில் Kyunki Saas Bhi Kabhi Bahu Thi என்ற ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார் .
துளசி என்ற கதாபாத்திரத்தில் ஸ்மிருதி இராணி நடிக்கும் இந்த தொடர் இந்தி மொழி பேசும் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்று. இந்த தொடரில் தான் பில்கேட்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் . இதற்கான முன்னோட்ட காட்சிகள் வெளியாகி இருக்கின்றன . அதில் ஸ்மிருதி இராணி ஒருவருடன் வீடியோ காலில் பேசுகிறார் . ஜெயஸ்ரீ கிருஷ்ணா என பேச்சை தொடங்கும் அவர் அமெரிக்காவில் இருந்து நீங்கள் நேரடியாக என் குடும்பத்துடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நாங்கள் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறுகிறார்.

எதிர்முனையில் பில்கேட்ஸ் நன்றி துளசி ஜி என கூறுகிறார். இது தொடர்பான பிரமோ காட்சிகளும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு இந்த காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஸ்மிருதி இரானி மற்றும் பில்கேட்ஸ் இடையிலான கலந்துரையாடலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், பேறுகால உடல்நலன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய எபிசோடில் பில்கேட்ஸின் காட்சிகள் இடம்பெற உள்ளன. பில்கேட்ஸ் ஏற்கனவே ங்கிலத்தில் ஒளிபரப்பாகும் பிக் பேங்க் தியரி என்ற தொலைக்காட்சி தொடரில் தோன்றியிருக்கிறார்.
பில்கேட்ஸ் இந்தியாவுடன் நெருங்கிய இணைப்பு கொண்ட ஒரு நபராக இருக்கிறார். இந்தியாவில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு பில்கேட்ஸின் அறக்கட்டளை நிதி உதவி செய்திருக்கிறது. சுகாதாரம், வேளாண்மை, பாலின சமத்துவம் ஆகிய துறைகளில் பல்வேறு செயல்பாடுகளுக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை நிதி உதவி அளித்து வருகிறது. பில்கேட்ஸ் அடிக்கடி இந்தியாவுக்கும் வருகை தருவார். சமீபத்தில் கூட இவர் இந்தியா வந்த போது ஒரு டீக்கடையில் டீ குடித்தார், இதன் மூலம் அந்த நபர் நாடு முழுவதும் பிரபலமானார்.