இந்தியாவில் யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஒரு போன் நம்பர் மற்றும் ஒரு க்யூ ஆர் கோடு இருந்தாலே போதும் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு மிக எளிமையாக பணம் அனுப்ப முடிகிறது.
தற்போது பெரும்பாலான மக்கள் வெளியில் செல்லும்போது கைகளில் பணமே கொண்டு செல்வது கிடையாது. 5 ரூபாய் என்றால் கூட யுபிஐ மூலம் செலுத்துகிறார்கள். இந்தியாவில் யுபிஐ பேமெண்ட்களை நிர்வகித்து வரும் என்பிசிஐ அமைப்பு, நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை அதில் ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது புதிதாக யுபிஐ ஹெல்ப் (UPI Help) என்ற ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது . யுபிஐ ஹெல்ப் என்றால் என்ன , சாதாரண மக்களுக்கு இது எவ்வாறு பயன்படும் , எப்படி இதில் ஏஐ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து இருக்கிறார்கள் என்பதை தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான நம்முடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கக்கூடிய , அதே வேளையில் நம்முடைய புகார்கள் மற்றும் குறைகளை தீர்க்கக்கூடிய ஒரு வசதி தான் யுபிஐ ஹெல்ப். ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் என்பிசிஐ இந்த வசதியை அறிமுகம் செய்திருக்கிறது .தற்போது சோதனை கட்டத்தில் இருக்கக்கூடிய இந்த யுபிஐ ஹெல்ப் வசதி விரைவில் அனைத்து பயனர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
பொதுவாக நாம் ஜிபே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது சில சமயங்களில் சிக்கல் ஏற்படும். உதாரணமாக நாம் பணம் அனுப்பி இருப்போம், சம்பந்தப்பட்ட நபரின் கணக்கிற்கு பணம் சென்றிருக்காது ஆனால் உங்களுடைய கணக்கிலிருந்து பணம் குறைந்திருக்கும் . சில சமயங்களில் பிராசசிங் என காட்டி அப்படியே நின்றுவிடும் . இது போன்ற பிரச்சனைகளுக்கும் சிக்கல்களையும் தீர்க்கக்கூடிய ஒரு சேவை தான் யுபிஐ ஹெல்ப். இது ஒரு ஏஐ சேட் பாட் .
அதாவது யுபிஐ செயலிகளை பயன்படுத்தும் போது ஏற்படும் சந்தேகங்கள், நம்முடைய பரிவர்த்தனை நிறைவேறியதா இல்லையா, இல்லை என்றால் எப்படி புகார் அளிப்பது , அந்த பணம் மீண்டும் நமக்கு ரீஃபண்ட் செய்யப்பட்டதா இல்லையா என்பன உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் இந்த யுபிஐ ஹெல்ப் வழங்கும் .
வழக்கமாக யுபிஐ பண பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்படும் போது நாம் சம்பந்தப்பட்ட செயலி அல்லது வங்கியை நாடி தான் புகார் தர வேண்டும். இதற்கு சில நேரம் தேவைப்படும். ஆனால் யுபிஐ ஹெல்பில் ஒரு கிளிக் செய்தாலே இந்த வேலை முடிந்து விடும். இது மட்டுமில்லாமல் எதற்கெல்லாம் யுபிஐ-இல் ஆட்டோபே இருக்கிறது , அதனை எப்படி மாற்றுவது என்பன உள்ளிட்ட அனைத்தையும் யுபிஐ ஹெல்ப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தற்போதைக்கு என்பிசிஐ இணையதளம், வங்கிகளின் சாட் பாட்களில் சோதனை செய்யப்படும் இந்த வசதி விரைவில் அனைத்து யுபிஐ செயலிகளுக்கும் வர இருக்கிறது. உதாரணமாக யுபிஐ ஹெல்ப்பில் என்னுடைய பரிவர்த்தனை பெண்டிங் என காட்டுகிறது நான் செய்ய வேண்டும் என கேட்டால் அது வழிமுறைகளை வழங்கும். இந்த பரிவர்த்தனை தொடர்பாக புகார் தர வேண்டும் என்றால் அதுவே செய்துவிடும். புகாரின் நிலையை கூறு என்றால் தற்போது அதன் நிலை என்ன என்பதை காட்டிவிடும்.