அமெரிக்க நிறுவனமான என்விடியா, உலகின் முதல் 5 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு 4 டிரில்லியன் டாலர் என்ற சாதனையை படைத்த இதே நிறுவனம், இப்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
நேற்று ஆப்பிள் 4 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்ற 3வது பெரிய நிறுவனமாக உருவெடுத்த நிலையில், இன்று என்விடியா புதிய சாதனையை படைத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு, என்விடியா-வின் சிப்கள் மிகவும் முக்கிய தேவையாக மாறியிருக்கும் காரணத்தால் இந்நிறுவனத்தின் சிப்களுக்கு சந்தையில் பெரும் டிமாண்ட் உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த 3 வருடங்களாக என்விடியா பங்குகள் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
என்விடியாவின் பங்கு விலை அமெரிக்க நேரத்தில் புதன்கிழமை காலை வர்த்தகத்தில் 207.86 டாலரைத் தொட்டது, இதன் மூலம் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5.05 டிரில்லியன் டாலராக உயர்ந்தது.
என்விடியாவின் சந்தை மதிப்பு பார்க்கும் போது இந்தியா, ஜப்பான், யுகே ஆகிய நாடுகளின் GDP விட அதிகம். சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் GDP 4 டிரில்லியன் டாலருக்கும் குறைவு. ஜப்பான் மற்றும் யுகேயின் GDPயும் இதைவிட குறைவு.
ஒரு தனியார் நிறுவனத்தின் மதிப்பு மூன்று பெரிய நாடுகளின் பொருளாதாரத்தை மிஞ்சியதுள்ளது பிரம்மிக்க வைக்கும் விஷயமாக உள்ளது. AI தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் தற்போது என்விடியா உள்ளது.
என்விடியா தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் செவ்வாய்கிழமை 500 பில்லியன் டாலர் மதிப்பிலான சிப் ஆர்டர்களை பெற்றுள்ளதாக அறிவித்தார். இதேபோல் என்விடியா உபர் நிறுவனத்துடன் ரோபோடாக்ஸி (தானியங்கி டாக்ஸி) திட்டத்தில் கூட்டணி முறையில் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதோடு நோக்கியாவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்து, 6G தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட உள்ளதாகவும் என்விடியா தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க எரிசக்தித் துறையுடன் (Department of Energy) இணைந்து ஏழு புதிய AI சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்க உள்ளது என்விடியா.
இப்படி பல இடத்தில் பல திட்டங்களை என்விடியா செய்ய துவங்கியுள்ளது, இதைவிட முக்கியமான ஓபன்ஏஐ நிறுவனத்தில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்து சாட்ஜிபிடி-யின் முதுகெலும்பாக என்விடியா திகழப்போகிறது.
என்விடியாவின் 5 டிரில்லியன் டாலர் மதிப்பு என்பது பாதி கிணற்றை தாண்டியதாகவே பார்க்கப்படுகிறது. தற்போது துவங்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களின் பலன் இனி வரும் காலத்தில் தான் தெரியும் என்பதால் அடுத்த சில மாதங்களில் அல்லது சில காலாண்டுகளில் என்விடியாவின் சந்தை மதிப்பு 6 டிரில்லியன் டாலர் அளவீட்டை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
