சமீப காலமாக மும்பையில் பாலிவுட் பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி ஹரி பாக்ஸரை இந்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது. அவர் அமெரிக்காவில் பதுங்கி இருந்தார். இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் மும்பை வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் இருந்து இந்த கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. நடிகர் துஷார் கபூர், ரன்வீர் கபூர், ரன்வீர் சிங் ஆகியோருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மும்பை போலீஸார் ஹரி பாக்ஸரை தேடி வந்தனர்.
அதோடு கடந்த மாதம் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த தேவையான ஆயுத உதவிகளை செய்ததாகவும் ஹரி பாக்ஸர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது.
.
இந்நிலையில் டெல்லி மற்றும் ஹரியானா போலீஸார் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஹரி பாக்ஸர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவிற்கு கொண்டு வர சி.பி.ஐ அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவரான ஹரி பாக்ஸர் வெளிநாட்டில் இருந்து கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை வழிநடத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். ஜெய்ப்பூரில் தங்கி இருந்தபோது பாக்ஸிங் கற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனது பெயரை ஹரி பாக்ஸர் என்று மாற்றிக்கொண்டார். ஆரம்பத்தில் சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது ராஜஸ்தான் உட்பட நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஹரி பாக்ஸர் இந்தியாவில் இருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு சென்றார். ஹரி பாக்ஸரின் கைது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கைது மூலம் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








