மனைவியை வைத்து லஞ்ச வேட்டை.. வேலைக்கே போகாமல் ரூ.37.5 லட்சம் சம்பளம்.. வசமாக சிக்கிய அரசு அதிகாரி..!


அரசு அதிகாரி ஒருவர், டெண்டர்கள் வழங்கியதற்கு பிரதிபலனாக தனது மனைவியின் பெயரில் போலியாக சம்பளம் பெற்றதன் மூலம் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசுக்கு சொந்தமான ராஜ்காம்ப் இன்போ சர்வீசஸ் (Rajcomp Info Services) நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை இணை இயக்குநராகப் பணியாற்றி வருபவர் பிரத்யுமான் திக்சித். இவர், அரசின் டெண்டர்களை வழங்குவதற்காக இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டி, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

மனைவியை வைத்து லஞ்ச வேட்டை.. வேலைக்கே போகாமல் ரூ.37.5 லட்சம் சம்பளம்.. வசமாக சிக்கிய அரசு அதிகாரி..!

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விசாரணையில், ஜனவரி 2019 முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில், பிரத்யுமான் திக்சித்தின் மனைவி பூனம் திக்சித்துக்கு சொந்தமான 5 வங்கிக் கணக்குகளில், 2 தனியார் நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ.37.54 லட்சம் பணம் செலுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்தப் பணம் சம்பளம் என்ற பெயரில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பூனம் திக்சித் அந்த 2 நிறுவனங்களிலும் வேலை செய்ததாக போலி வருகைப் பதிவேடுகளும் தயாரிக்கப்பட்டிருந்தன. ஆனால், தீவிர விசாரணைக்குப் பிறகு, பூனம் திக்சித் ஒருமுறை கூட அந்த 2 நிறுவனங்களுக்கும் நேரில் சென்றதில்லை என்பதும், அனைத்து வருகைப் பதிவுகளும் போலியானவை என்பதும் தெரியவந்தது. இவை அனைத்தும் அரசு அதிகாரியான அவரது கணவர் பிரத்யுமான் திக்சித்தின் உதவியுடன் தயார் செய்யப்பட்டுள்ளன என்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இந்த மோசடி நடைபெற்ற காலகட்டத்தில், சம்பந்தப்பட்ட அந்த தனியார் நிறுவனங்களுக்கும் அரசின் பல்வேறு டெண்டர்கள் வழங்கப்பட்டிருப்பது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரியான பிரத்யுமான் திக்சித், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி, மனைவி அந்த நிறுவனங்களில் வேலை செய்வது போலவும், அதற்குச் சம்பளமாகப் பணம் பெறுவது போலவும் சித்தரித்து, ரூ.37.54 லட்சத்தை லஞ்சமாகப் பெற்றிருக்கிறார்.

இந்த லஞ்சத்திற்குப் பதிலாகவே அந்த நிறுவனங்களுக்கு அரசின் முக்கிய டெண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார் என்பது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது பிரத்யுமான் திக்சித் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *