டாலர் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? தங்க வேட்டையில் களமிறங்கிய RBI.. நிபுணர் முக்கிய வார்னிங்..!!


சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் தங்கத்தை குவித்து வருவது, உலகப் பொருளாதார அமைப்பில் சிவப்பு எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளதாக நிதி மற்றும் வரித்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் தங்க வேட்டையில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தங்க கையிருப்பு செப்டம்பர் 26, 2025 நிலவரப்படி 880 மெட்ரிக் டன்-ஐ தாண்டி, அதன் மொத்த மதிப்பு 95 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் சுமார் 3,16,000 கிலோ தங்கத்தை (316 டன்) வாங்கியுள்ளன. அதே நேரத்தில், தங்கத்தின் விலை 63% வரை உயர்ந்துள்ளது. இது வெறுமனே முதலீட்டு ஆர்வம் அல்ல. உலகளாவிய ஒழுங்குமுறையின் மையத்தில் பிளவு ஏற்படுவதற்கான அறிகுறி என்று டேக்ஸ் பட்டி (Tax Buddy) நிறுவனத்தின் நிறுவனர் சுஜித் பங்காா் எச்சரித்துள்ளார்.

டாலர் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? தங்க வேட்டையில் களமிறங்கிய RBI.. நிபுணர் முக்கிய வார்னிங்..!!

உலகப் பொருளாதாரம் பிளவுபடுவதற்கான 9 எச்சரிக்கை அறிகுறிகள் : தங்கத்தின் விலை உயர்வு : கடந்த 2008 ஆம் ஆண்டில் நிதி நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று மற்றும் வர்த்தகப் போர்கள் போன்ற நெருக்கடிகளின்போது தங்கம் விலை உயர்ந்தாலும், தற்போதுள்ள வேகம் வரலாறு காணாதது என்று சிஜித் பங்காா் தெரிவித்துள்ளார்.

தங்கத்தில் அதிக முதலீடு : முதலீட்டாளர்கள் பாரம்பரியமாகப் பாதுகாப்பான புகலிடமாக கருதப்பட்ட அமெரிக்க டாலர்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கப் பத்திரங்களில் இருந்து விலகி தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். அமெரிக்க டாலர் அதன் மதிப்பு சரிவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இந்த நகர்வை முதலீட்டாளர்கள் “மதிப்பிழப்பு வர்த்தகம்” என்று அழைக்கின்றனர்.

நம்பிக்கை இழப்பு : மத்திய வங்கிகள் மற்றும் அரசாங்கங்களின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது. அச்சுப் பணத்தை போல அச்சிட முடியாத, கொள்கை சார்பு இல்லாத மற்றும் கடன் அபாயம் இல்லாத தங்கத்தின் மீது அவர்கள் ஆர்வம் திரும்புகின்றனர்.

மத்திய வங்கிகளே தங்கம் வாங்குவதில் தீவிரம் : சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் முன்பு தங்கத்தை விற்ற நிலையில், தற்போது அவை பெரிய அளவில் வாங்குபவர்களாக மாறியுள்ளன. குறிப்பாக பிரிக்ஸ் நாடுகள், அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதை குறைப்பதற்கான மூலோபாயமாக இதை பயன்படுத்துகின்றன.

ரஷ்யா மீதான பொருளாதார தடை : கடந்த 2022ஆம் ஆண்டில் ரஷ்யாவின் மத்திய வங்கி சொத்துக்களை மேற்கத்திய நாடுகள் முடக்கியது. அதேபோல், டாலர் கையிருப்பு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம் என்பதை உலகிற்கு உணர்த்தியது. இதுவே பாதுகாப்பான கையிருப்பு என்றால் என்ன என்று உலக நாடுகள் மறுபரிசீலனை செய்யத் தூண்டியது.

வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலையேற்றம் : தங்கம் மட்டுமல்லாமல், தொழில் மற்றும் பசுமைத் தொழில்நுட்பத் தேவை காரணமாக வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலைகளும் உயர்ந்து வருகின்றன.

தங்கத்தின் பங்கு உயர்வு : மத்திய வங்கிகளின் மொத்த கையிருப்பில் தங்கத்தின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் ரஷ்யா 29.5% முதல் 35.8%, சீனா 4.9% முதல் 6.7%, ஜப்பான் 5.1% முதல் 6.8%, இந்தியா 9.6% முதல் 13.1% மற்றும் இங்கிலாந்து 13.5% முதல் 16.6% ஆக உள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார காரணிகள் : அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மீதான அழுத்தம், குறைந்த வட்டி விகிதங்கள், வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஆகியவை தங்கத்தின் கவர்ச்சியை அதிகரித்துள்ளன.

நம்பிக்கை : வர்த்தக மோதல்கள், பொருளாதார தடைகள் மற்றும் வர்த்தகப் போர்கள் ஆகியவை டாலரின் உலகளாவிய நிதிப் பங்கைக் குறைக்கும் நேரத்தில், தங்கம் என்பது கையெழுத்து இல்லாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

சுஜித் பங்காா் தனது பதிவில், “இந்த நகர்வு பேராசை பற்றியது அல்ல. பயம், நம்பிக்கை மற்றும் பலவீனம் பற்றியது. வாங்கப்படும் ஒவ்வொரு டன் தங்கமும் நிச்சயமற்ற தன்மைக்கு எதிரான ஒரு வாக்காகும். நாணயங்களின் மீதான நம்பிக்கை திரும்பும் வரை, தங்கம் தொடர்ந்து பிரகாசிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *