அகமதாபாத்தில் வெள்ளியை வாங்கி விசாகப்பட்டினத்தில் விற்றால் ரூ.15,000 வரை லாபம் ஈட்டலாம் என்று சமூக வலைதளங்களில் வைரலான ஒரு செய்தி குறித்து, ஒரு பட்டயக் கணக்காளர் (CA) சந்தை மற்றும் சட்டரீதியான ஆபத்துகளை சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது வைரலாகி வரும் அந்த செய்தியில், ஒரு கிலோ வெள்ளியை அகமதாபாத்தில் ரூ.1.89 லட்சத்துக்கு வாங்கி, அதை விசாகப்பட்டினத்தில் ரூ.2.06 லட்சத்துக்கு விற்பனை செய்தால், ரயில் கட்டணம் மற்றும் வரியைக் கழித்து ஒரு பயணத்திற்கு ரூ.14,490 நிகர லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாதத்திற்கு 3 முதல் 4 முறை இவ்வாறு பயணம் செய்வதன் மூலம் ரூ.58,000 வரை சம்பாதிக்கலாம் என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த லாப கணக்கீட்டில் உள்ள ஆபத்துகளை பட்டய கணக்காளரான மீனல் கோயல் தனது லிங்க்டுஇன் (LinkedIn) பதிவில், இந்தத் திட்டம் “சட்டமீறல், அபாயம் மற்றும் வெறும் கற்பனையின் கலவை” என்று அவர் சாடியுள்ளார்.
சட்டரீதியான மற்றும் நடைமுறை சிக்கல்கள் :ஜிஎஸ்டி மற்றும் அனுமதி அவசியம் : “ஜிஎஸ்டி பதிவு மற்றும் டீலர் உரிமம் இல்லாமல் விலைமதிப்பற்ற உலோகங்களை சட்டப்பூர்வமாக வாங்கி விற்க முடியாது” என்று மீனல் கோயல் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் திட்டம் அடிப்படை வணிக விதிகளை முற்றிலுமாக மீறுவதாக உள்ளது.
நிதி மற்றும் தனிநபர் பாதுகாப்பு : சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ வெள்ளியை எந்தவித காப்பீடும், பாதுகாப்பும் இல்லாமல் ரயிலில் எடுத்துச் செல்வது மிக அதிக அபாயகரமானது. அது திருடப்பட்டாலோ அல்லது பறிமுதல் செய்யப்பட்டாலோ, உங்கள் முழு முதலீட்டையும் இழக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
வாங்குபவர் கிடைப்பது கடினம் : வெள்ளி இலக்கை அடைந்தாலும், சட்டப்பூர்வமான ஒரு வாங்குபவரை தேடிக் கண்டுபிடிப்பது எளிதல்ல. யாரிடமும் பில், தூய்மைச் சான்றிதழ் அல்லது வணிகப் பதிவு இல்லாத ஒருவரிடம் யாரும் சந்தை விலைக்கு வெள்ளியை வாங்க மாட்டார்கள் என்றும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
சந்தை அபாயம் : வெள்ளி விலை என்பது நாளுக்கு நாள், சில சமயங்களில் மணி நேரத்திற்குள்ளேயே மாறக்கூடியது. விற்பவர் மற்றொரு நகரத்தை அடைவதற்குள் விலையில் ஏற்படும் மாற்றம், கணக்கிடப்பட்ட அந்த லாப வாய்ப்பை முற்றிலுமாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது.
மீனல் கோயலின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. மேலும், ஒழுங்குமுறைகளை புறக்கணித்து, சந்தை உண்மைகளுக்கு முரண்படும், ‘சீக்கிரம் பணக்காரர் ஆகும்’ போன்ற எளிமைப்படுத்தப்பட்ட திட்டங்களின் அபாயங்கள் பற்றியும் பலர் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.