தொழில் உலகில் பல நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் சீரான விற்பனையை கொண்டிருக்க கூடிய நிலையில், ஒரு சில வாரங்களிலேயே தங்கள் மொத்த ஆண்டு வருவாயில் 70 முதல் 80 சதவீதத்தை ஈட்டும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது சிவகாசியை சேர்ந்த ‘ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ்’ (Standard Fireworks) நிறுவனம். பல கட்டுப்பாடுகள், சந்தை சவால்களை தாண்டி 3 தலைமுறைகளாக தலைநிமிர்ந்து நிற்கும் இந்த நிறுவனம், பட்டாசுத் துறையின் பின்னணியில் இயங்கும் சவாலான தொழிலைப் பற்றி எடுத்துரைக்கிறது.
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1942ஆம் ஆண்டில் என்.ஆர்.கே. இராஜரத்தினம் என்பவரால் தொடங்கப்பட்ட ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனம், இன்று இந்தியப் பட்டாசுத் துறையில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரை வருவாய் ஈட்டுகிறது. இதில், 70 முதல் 80 சதவீத வருமானம் என்பது தீபாவளி பண்டிகையை ஒட்டிய 20 நாட்களில் மட்டுமே கிடைக்கிறது என்பதுதான் ஆச்சரியமான தகவல்.

இந்த 20 நாள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனம், ஏறத்தாழ 345 நாட்களும் விற்பனை இல்லாமல் சரக்குகளை குவித்து வருகிறது. பட்டாசுகள், மத்தாப்புகள் மற்றும் புதுமையான வகைகள் என 4,000-க்கும் மேற்பட்ட வகையான தயாரிப்புகளை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்தச் சவாலான இலக்கை அடைய, உற்பத்தி காலத்தில் சுமார் 8 மாதங்களுக்கு 24 மணி நேரமும் உற்பத்தி நடைபெறுகிறது.
இந்தத் தொழில் சந்தையில் நிலைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. சிவகாசியில் மட்டும் 800-க்கும் அதிகமான பட்டாசு உற்பத்தியாளர்களுடன் ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் கடுமையான போட்டி போடுகிறது. இவற்றையும் தாண்டி, 2016ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத் தடைகள், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் நெருக்கடி எனப் பல தடைகளை இந்நிறுவனம் கடந்து வந்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் சான்றளிக்கப்பட்ட பட்டாசு விற்பனை அளவில் சுமார் 28 சதவீதத்தை இந்த நிறுவனம் பூர்த்தி செய்கிறது.
உள்நாட்டுத் தேவை மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பட்டாசுகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இதன் செயல்பாடு விரிவடைந்துள்ளது. உற்பத்தி மற்றும் விநியோகத்தில் 10,000-க்கும் அதிகமான பணியாளர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.
குறுகிய காலத் தேவைக்காக ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்து சேமிக்கும் இந்த வர்த்தக மாதிரியே இப்போது இந்த நிறுவனத்தின் பலமாக மாறியுள்ளது. இந்தத் தொழிலில் இவ்வளவு பெரிய சரக்குக் கையிருப்பை வைக்க அதிக மூலதனம் தேவைப்படுவதால், சிறிய நிறுவனங்கள் இவர்களுடன் போட்டியிடுவது கடினம்.
இதில் தனிச்சிறப்பு என்னவென்றால், இந்த நிறுவனம் மூன்றாவது தலைமுறையினரால் இன்னமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இன்று வரை எந்த ஒரு தனியார் பங்கு நிறுவனத்தின் முதலீட்டையும் அல்லது துணிகர முதலீட்டையும் பெறாமல், தங்கள் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து வருகின்றனர்.