இந்தியாவில் உள்ள 8 முக்கிய நகரங்களில் ஒட்டுமொத்த வீட்டு விற்பனை தேவை சற்று குறைந்திருந்தாலும், தென்னிந்தியாவின் 3 முக்கிய நகரங்களான ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை ஆகியவற்றில் குடியிருப்புச் சொத்துக்களின் விற்பனை ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 47 சதவீதம் உயர்ந்துள்ளதாக PropTiger நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தென் மாநிலங்களின் இந்த 3 நகரங்களிலும் கடந்த செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 38,644 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் விற்கப்பட்ட 26,284 யூனிட்களை விட 47 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் நகரில் வீட்டு விற்பனை 53 சதவீதம் உயர்ந்து, 11,564 யூனிட்களில் இருந்து 17,658 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இது மற்ற நகரங்களை விட குறிப்பிடத்தக்க உயர்வாகும். அதேபோல், பெங்களூருவில் வீட்டு விற்பனை 18 சதவீதம் உயர்ந்து, 11,160 யூனிட்களில் இருந்து 13,124 யூனிட்களாக உயர்ந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வீட்டு விற்பனை இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்து, கடந்த ஆண்டின் 3,560 யூனிட்களில் இருந்து இந்த ஆண்டு ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 7,862 யூனிட்களாக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த சந்தை நிலவரம் : ஆரம்ப நிலை வீட்டுச் சந்தைகளில் (முதல் விற்பனை) இந்தியாவின் முதல் 8 முக்கிய நகரங்களில் ஒட்டுமொத்தமாகச் சுமார் 1 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்கப்பட்ட 96,544 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 95,547 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. மும்பை, புனே மற்றும் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் தேவை குறைந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
மும்பை மெட்ரோபாலிட்டன் பகுதியில் வீட்டு விற்பனை 22 சதவீதம் குறைந்து, 30,010 யூனிட்களில் இருந்து 23,334 யூனிட்களாகச் சரிந்துள்ளது. புனேவில் வீட்டு விற்பனை 28 சதவீதம் குறைந்து, 18,004 யூனிட்களில் இருந்து 12,990 யூனிட்களாகக் குறைந்துள்ளது.
டெல்லி-என்சிஆரில் வீட்டு விற்பனை 21 சதவீதம் குறைந்து, 10,098 யூனிட்களில் இருந்து 7,961 யூனிட்களாகச் சரிந்துள்ளது. அகமதாபாத்த்தில் 5 சதவீதம் சரிந்து, 9,352 யூனிட்களில் இருந்து 8,889 யூனிட்களாகக் குறைந்துள்ளது. கொல்கத்தாவில் விதிவிலக்காக 33 சதவீதம் விற்பனை அதிகரிப்பை (2,796 யூனிட்களில் இருந்து 3,729 யூனிட்கள்) பதிவு செய்துள்ளது.
சந்தைக்கான எதிர்பார்ப்பு : சந்தை குறித்துப் பேசிய ஆரம் பிராப்டெக்கின் நிர்வாக இயக்குநர் ஓம்கார் ஷெட்டே, சிமெண்டிற்கான ஜிஎஸ்டி குறைப்பு உளிட்ட முன்கூட்டிய கொள்கை சீர்திருத்தங்கள், கட்டுமானச் செலவுகளைச் சமாளிக்க உதவியதுடன், கட்டுநர்களின் நம்பிக்கையையும் பலப்படுத்தியுள்ளன என்றார்.
இதன் மூலம் தென்னிந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையங்களான ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை ஆகியவை நாட்டின் ஒட்டுமொத்த வீட்டு விற்பனை சந்தைக்கு ஒரு வலுவான ஊக்கத்தை அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.