டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஹெச்1பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ள நிலையில், அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் மாற்று வர்த்தக முறையை செயல்படுத்தி வருகிறது.
ஏற்கனவே டிசிஎஸ் மாற்று திட்டத்தை செயல்படுத்த துவங்கியிருக்கும் வேளையில், டாடா குழுமத்தில் மற்றொரு முக்கிய நிறுவனமான டாடா டெக்னாலஜீஸ் இனி வரும் காலக்கட்டத்தில் ஹெச்1பி விசா மூலம் ஊழியர்களை பணியில் அமர்த்துவதை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இதுக்குறித்து டாடா டெக்னாலஜீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உடனடியாக அமெரிக்காவில் உள்ளூர் மக்களை அதிகம் பணியில் அமர்த்த உள்ளோம் என்று அறிவித்துள்ளது. இந்த முடிவு, H1-B விசாக்களுக்கு 1 லட்சம் டாலர் என்ற உயரிய கட்டணம் விதிக்கும் அமெரிக்க அரசின் புதிய கொள்கையால் ஏற்படும் செலவுகளை குறைக்கும் விதமாக எடுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அரசின் H1-B விசா கட்டணங்கள் அமேசான், மெட்டா பிளாட்பார்ம்ஸ் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களையும் பாதிக்கும் வகையில் இருப்பதால், இதை நம்பி அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் மாற்று திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு, H1-B விசா பயனாளிகளில் சுமார் 75 சதவீதம் இந்தியர்கள் ஆவார். இந்த உயர்வு, இந்திய ஐடி நிறுவனங்களின் செலவுகளை அதிகரித்து, அமெரிக்க சந்தையில் அவற்றின் செயல்பாட்டை பாதிக்கும் என்பதால் இனி வரும் காலத்தில் ஹெச்1பி விசா இல்லாமல் எல்1 விசா போன்ற மாற்று திட்டங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர், இதில் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனமும் ஒன்று.
டாடா டெக்னாலஜீஸ் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வாரன் ஹாரிஸ் ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையிடம் பேசுகையில் “விசா சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்க, அமெரிக்காவில் உள்ளூர் ஊழியர்களை அதிகம் பணியில் அமர்த்த உள்ளோ்” என்று தெரிவித்தார்.
இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட டாடா டெக்னாலஜீஸ் நிறுவனம், ஆட்டோமொபைல், விமானம், இயந்திர தயாரிப்பாளர்களுக்கு இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப சேவைகளை 24 நாடுகளில் வழங்குகிறது. உலகம் முழுவதும் டாடா டெக்னாலஜீஸ்-க்கு சுமார் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர், இதில் அமெரிக்காவில் கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்கள் உள்ளனர்.