அமெரிக்காவில் சர்வதேச பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தையை ஆட்டம் காணச் செய்யும் விதமாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு புதிய கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இனி புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு நிறுவனங்கள் 100,000 அமெரிக்க டாலர் (சுமார் ₹83 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், விசா முறையின் தவறான பயன்பாட்டைத் தடுக்கவுமே இந்தக் கட்டண உயர்வு என்று அரசு தெரிவித்தாலும், இது தொழில் துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
H-1B விசா, தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற சிறப்பு துறைகளில் வெளிநாட்டு நிபுணர்களைத் தற்காலிகமாகப் பணியமர்த்த அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவுகிறது. ஆனால், இந்த அதீதக் கட்டண உயர்வுக்கு தொழில் தலைவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

யு.எஸ். சேம்பர் ஆஃப் காமர்ஸ் (US Chamber of Commerce) இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததுடன், இந்தக் கட்டணம், குறிப்பாக ஸ்டார்ட்அப் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு செலவழிக்க முடியாதது என்று கூறியுள்ளது.
இந்திய நிறுவனங்களின் அதிரடி முடிவுகள் : இந்திய நிபுணர்களை அதிக அளவில் பணியமர்த்தும் நிறுவனங்களில் ஒன்றான காக்னிசென்ட் (Cognizant), தனது பணியாளர் தேர்வில் மாற்றங்களை செய்துள்ளது. சமீபத்திய வேலை அறிவிப்புகளில், விண்ணப்பதாரர்கள் “நிறுவனத்தின் ஆதரவு இல்லாமல் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வேலை செய்ய அதிகாரம் பெற்றிருக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்து, H-1B ஆதரவை குறைத்துள்ளது.
மறுபுறம், உலகின் மிகப்பெரிய H-1B ஸ்பான்சர்களில் ஒன்றான இந்திய ஐடி ஜாம்பவான் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இந்தத் திட்டத்தின் மூலம் பணியமர்த்துவதை முற்றிலும் நிறுத்திவிடுவதாக அறிவித்துள்ளது. டிசிஎஸ் தலைமைச் செயல் அதிகாரி கே.கிருத்திவாசன், தங்கள் நிறுவனம் ஏற்கனவே அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் உள்ளூர்மயமாக்கி வருவதாகவும், இந்தக் கொள்கை மாற்றங்களுக்கு ஏற்றவாறு அதிகமான அமெரிக்கப் பணியாளர்களை நியமித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்ற நிறுவனங்களின் பின்னடைவு : கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான இன்டூயிட்டிவ் சர்ஜிகல் (Intuitive Surgical), இந்தக் கொள்கையால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையை காரணம் காட்டி, H-1B விசா ஸ்பான்சர்ஷிப்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இது பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளைப் பாதிக்கிறது.
அதேபோல், 2,400-க்கும் மேற்பட்ட H-1B வைத்திருப்பவர்களைப் பணியமர்த்தியுள்ள சில்லறை வர்த்தக ஜாம்பவானான வால்மார்ட்டும் (Walmart) விசா ஸ்பான்சர்ஷிப்களை நிறுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நிபுணர்களுக்கு என்ன நடக்கும்..?: இந்தக் கொள்கை, அமெரிக்க வேலைவாய்ப்புக்கு வழி தேடும் ஆயிரக்கணக்கான இந்தியப் பொறியாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் STEM பட்டதாரிகளுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளது. புதிய கட்டணம் மற்றும் பல நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்தியதால், இனி இந்தியாவில் உள்ள நிறுவனங்களிலும், ஐரோப்பாவிலும் உள்ள ரிமோட் வேலைகள் மற்றும் குளோபல் டெலிவரி மையங்களில் தேவை அதிகரிக்கும் என்று தொழில் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
