உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா புதுப்பிப்பு

திருப்பரங்குன்றம்: `எத்தனை துணிச்சல்… நாளையே தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்!' – உச்ச நீதிமன்றம்

தினப்புயல் • • இப்போதே • சுமார் 1 நிமிடம்
திருப்பரங்குன்றம்: `எத்தனை துணிச்சல்… நாளையே தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்!' – உச்ச நீதிமன்றம்
வாசிப்பு
Facebook Telegram

'கார்த்திகை தீபத் திருநாளான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ளலாம்' என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. கூடவே கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இதற்கிடையில், கார்த்திகை தீபத் திருநாளில் வழக்கமாக தீபமேற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மேல் பகுதியில் தீபமேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தவில்லை என நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மேலும், கார்த்திகை மாதம் முடிவதற்குள் தீபமேற்ற வேண்டும். மத்தியப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

.

இந்த வழக்கை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி விபுல் பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தர்காவின் பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடாது" என வாதிட்டனர். அதற்கு நீதிபதிகள் தரப்பு, “தர்காவின் பாதுகாப்பை குறைக்கமாட்டோம். அதை பலப்படுத்துவோம்" எனத் தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள், “நவம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தாமல் இருந்தது எங்களுக்குக் கடுமையான வேதனையை கொடுக்கிறது.

.

இத்தகைய சூழல்களை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டது; இல்லையெனில், அது அரசியலமைப்புச் சார்ந்த குழப்பத்திற்கு வழிவகுக்கும். நீதிமன்றத்தின் உத்தரவுகள் இப்படி மெத்தனமாக கையாளப்படும் பொழுது நாங்கள் அதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம். தற்போதைய சூழலைப் பார்க்கும்போது, நாங்கள் முதலில் தெரிவிக்க விரும்பும் வார்த்தை ஐயோ என்பதுதான். தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான வெளிப்பாடாக இந்த வார்த்தை இருக்கும். மிகுந்த வேதனையுடனும் மனத்துயரத்துடனும் இதனைத் தெரிவிக்கிறோம்.

இந்த நீதிமன்றமே ஒரு உத்தரவை மாற்றும் வரை, அதன் உத்தரவு மீறப்படும்போது எங்களால் செயலற்று அமர்ந்திருக்க முடியாது. இந்திய அரசியலமைப்பின் 129-வது பிரிவின் கீழ் ஒரு ஆவண நீதிமன்றமாக உள்ள இந்த நீதிமன்றம், சட்டத்தின் மாண்பிற்குப் பங்கம் ஏற்படும்போது நீதியை நிலைநாட்டப் போதுமான அதிகாரத்தைக் கொண்டுள்ளது; இத்தகைய நிகழ்வுகளுக்காகவே, நீதி நிர்வாகம் எந்தவொரு அதிகாரத்திற்கும் தலைவணங்காது என்ற வாக்குறுதியை விதைத்து, நாட்டு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் 1971-ஆம் ஆண்டின் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

.

ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடே உயர்ந்ததாகும். இந்திய மக்கள் தங்கள் குடிமக்கள் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உறுதி செய்ய மனப்பூர்வமாகத் தீர்மானித்துள்ளதன் வரையறைகளை அரசியலமைப்பின் முகப்புரை பிரதிபலிக்கிறது. இந்திய ஆட்சிப்பரப்பிற்குள் உள்ள அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்திற்குத் துணை நின்று செயல்பட வேண்டும் என அரசியலமைப்பின் 144-வது பிரிவு ஆணையிடுகிறது.

இந்தச் சட்டம் அரசியலமைப்பு நீதிமன்றங்களின் கைகளில் உள்ள ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும்; முறையான நீதி நிர்வாகம் காலத்தின் கட்டாயமாக இருக்கும் இடங்களில் அதனைப் பயன்படுத்த நீதிமன்றம் ஒருபோதும் தயங்காது.

இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டு இருக்கக்கூடிய நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தின் உத்தரவை வெளிப்படையாகவும் வேண்டும் என்றே மீறியதற்கான காரணங்களை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

அறங்காவலர் குழு இந்த நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தவறான மற்றும் சித்திரிக்கப்பட்ட விளக்கத்தை அளிப்பதன் மூலம் நீதிமன்ற உத்தரவுகளை மீற முயன்று உள்ளதோடு, அதனை செயல்படுத்துவதற்கு வேண்டுமென்றே இடையூறு விளைவித்திருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

.

தீபம் ஏற்றப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் கையொப்பமிட்ட தீர்மானம் ஒன்றை வாரியம் நிறைவேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நீதிமன்றம் உத்தரவிட்டபடி தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவிற்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பதாக அந்தத் தீர்மானத்தில் வாரியம் குறிப்பிட்டுள்ளது; மேலும், இந்தத் தீர்மானத்தைக் காரணமாகக் காட்டி மாவட்ட ஆட்சியர் தப்பிக்க முயற்சிக்கிறார். தகுந்த நேரத்தில் இவ்விவகாரத்தை நாங்கள் கையாள்வோம்.

வரலாற்றுத் தொடர்ச்சி, ஆகம விதிகள், மத ஆவணங்கள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகள் எனக் கூறப்படுபவற்றை (இது கடுமையாக மறுக்கப்படுகிறது) மேற்கோள் காட்டி, முந்தைய ஆண்டுகளில் ஏற்றப்பட்டதைப் போலவே வழக்கமான இடமான உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் மட்டுமே கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என வாரியம் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்த மாட்டோம் என்ற திட்டவட்டமான நிலைப்பாட்டை அறங்காவலர்கள் எடுத்துள்ளனர்.

.

இது அவர்கள் தரப்பில் இழைக்கப்பட்ட தீவிரமான விதிமீறலாகும்; இதற்கு மற்ற அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்தத் தீர்மானம், மேலோட்டமாகப் பார்க்கும்போதே, முதலாவதாக இந்த நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை வேண்டுமென்றே மற்றும் அப்பட்டமாக மீறியதை வெளிப்படுத்துகிறது; இரண்டாவதாக, இந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தைச் சீர்குலைக்கும் திட்டமிட்ட முயற்சியையும், உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தைத் துணிச்சலாகப் புறக்கணித்ததையும் இது காட்டுகிறது. தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு.

.

இடைக்கால உத்தரவைச் செயல்படுத்த வாரியம் மறுத்ததன் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது, இந்த அறிக்கை நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை மேலும் தீவிரப்படுத்துகிறது.

இந்த நீதிமன்றம் ஒரு உத்தரவின் மூலம் பேசும்போது, அது அரசியலமைப்பின் அதிகாரத்துடன் பேசுகிறது. அதன் உத்தரவுகள் கீழ்ப்படிதலைக் கோருகின்றன; மேலும் இந்திய ஆட்சிப்பரப்பிற்குள் உள்ள அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் இந்த நீதிமன்றத்திற்குத் துணை நின்று செயல்பட வேண்டும் என அரசியலமைப்பின் 144-வது பிரிவு வெளிப்படையாகக் கட்டளையிடுகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் முதலை கண்ணீரை வடித்துள்ளார்.

.

மேற்கண்ட உத்தரவில் நாங்கள் பிறப்பித்த அறிவுறுத்தல்களின்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ள முதற்கட்ட அறிக்கையில், இந்த நீதிமன்றம் உத்தரவிட்டபடி தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குக் கோயில் நிர்வாகிகள் யாரையும் நியமிக்காத காரணத்தால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றத் தேவையான அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் தான் எடுத்ததாகக் குறிப்பிட்டு முறையான மன்னிப்புக் கோரியுள்ள அவர், உத்தரவு நிறைவேற்றப்படாததற்கான பழியை முழுவதுமாகக் கோயில் நிர்வாகத்தின் மீது சுமத்த முயற்சித்துள்ளார். மதுரை ஆட்சியரின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது.

மாவட்ட மாஜிஸ்திரேட்டாகவும் உள்ள ஆட்சியர், இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருப்பது எங்களுக்கு ஆச்சர்யமளிக்கிறது. இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய வகையில், அவரது அதிகாரங்கள் மிகவும் விரிவானவை; அவரது கைகள் மிக நீளமானவை. முதற்கட்ட அறிக்கையும் மன்னிப்பும் பதிவில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அன்று உண்மையில் என்ன நடந்தது என்பதை அதில் உள்ள விவரங்கள் பிரதிபலிக்கின்றனவா என்பதை நாங்கள் இன்னும் ஆராய வேண்டியிருப்பதால், இக்கட்டத்தில் முதற்கட்ட அறிக்கையில் எங்களுக்குத் திருப்தி இல்லை.

உண்மையில், ஆட்சியர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு. கோபால் சங்கரநாராயணன், தொடக்கத்திலேயே விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், அதுவரை காத்திருப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இருப்பினும், ஆட்சியரின் நிலைப்பாடு, "நீ செத்தது போல நடி, நான் அழுவது போல பாசாங்கு செய்கிறேன்" என்ற பழமொழியையே நினைவூட்டுகிறது என்று கூறினால் போதுமானதாகும். இந்த அறிக்கை, மேலோட்டமாகப் பார்க்கும்போது (prima facie), முதலைக் கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை; மேலும் இது இந்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கத் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், புள்ளிவிவர நோக்கங்களுக்காக மட்டுமே பதிவில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

.

திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழுவை நீதிமன்றம் கலைக்கிறது. அவர்கள் அடுத்த உத்தரவு வரும் வரை செயல்படக் கூடாது… கோயில் நிர்வாகத்தை மேற்கொள்வதற்காக தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய நபர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று நாள்களுக்குள் நேரில் நோட்டீஸ் வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும்; மேலும் நோட்டீஸ் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நீதிமன்றத்தில் தனிப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யத் தவறினால், அவர் இந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

.

தற்போதைய வழக்கில் உள்ள கோயில் போன்ற ஒரு பொது நிறுவனத்தைப் பாதுகாப்பது என்பது, வழக்கமாக ஆணையர் அல்லது பொருந்தக்கூடிய மாநிலச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பிற நபரின் கடமைகளுக்குள் வருவதாகும். இருப்பினும், பொது நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறும்போது, இந்த நீதிமன்றம் தலையிட்டுள்ளது. இத்தகைய தலையீடு என்பது, அந்த நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கும், அதன் நிர்வாகம் அதன் மரபுகள், சடங்குகள் மற்றும் புனிதத்தன்மையை மதித்து நடப்பதை உறுதி செய்வதற்கும் எடுக்கப்படும் கடைசி கட்ட நடவடிக்கையாகும். நாளை (28) திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை CRPF பாதுகாப்பில் கொண்டு வர வேண்டும். மதுரை தமிழ்நாடு போலீஸ் அங்கிருந்து விலக வேண்டும்." எனக் காட்டமாகத் தெரிவித்தனர்.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →