வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்திருக்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அரசாங்கம் 50 சதவீத இறக்குமதி வரியை வசூல் செய்து வருகிறது. இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் லேசான விரிசலை உண்டாக்கியது.
அமெரிக்க அரசின் 50 சதவீத வரிவிதிப்பு இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கான ஏற்றுமதி துறை சார்ந்த தொழில்களை பாதிப்படைய செய்திருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் தொழில் முடங்கும் சூழலில் உள்ளனர். அமெரிக்க வாடிக்கையாளர்கள் 50% இறக்குமதி வரியை தங்கள் மீது சுமத்துவதாக கூறுகின்றனர். இதனால் தொழிலில் நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

டிரம்ப் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கும் இதே போல அதிகபட்ச வரியை விதித்திருக்கிறார். டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. இது அமெரிக்க பொருளாதாரத்திலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த இறக்குமதி வரி மூலம் அரசுக்கு கிடைத்த வருமானத்தை பொதுமக்களுக்கு பகிர்ந்து அளிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார் . அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தின் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன . வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை , பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்திருக்கிறது என பொதுமக்கள் அரசின் மீது கோபத்தில் இருக்கக்கூடிய சூழலில் தான் டிரம்ப் இப்படி ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார் .
அடுத்து வரக்கூடிய ஒரு குறுகிய காலத்திற்குள் பொதுமக்கள் அரசுக்கு கிடைத்த இந்த வரி வருவாயில் ஒரு கணிசமான தொகையை பெறுவார்கள் என தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த வரி செலுத்தக்கூடிய மக்களுக்கு , இந்த இறக்குமதி வரி மூலம் கிடைத்த வருவாயை பகிர்ந்து அளிக்கும் பரிந்துரை இருப்பதாகவும் அதனை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான இறக்குமதி வரிகளை உயர்த்தியதன் மூலம் 650 பில்லியன் டாலர்கள் , ஜப்பானுக்கான இறக்குமதி வரியை அதிகரித்ததன் மூலம் 550 பில்லியன் டாலர்கள், தென்கொரியாவுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியதன் மூலம் 350 பில்லியன் டாலர்கள் வரை வருமானம் ஈட்டி இருக்கிறது என கூறியுள்ளார்.
இந்த இறக்குமதி வரி மூலம் அரசுக்கு கிடைத்திருக்கும் வருவாய் அமெரிக்காவை சேர்ந்த மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆனால் இது அத்தனை எளிதான காரியம் இல்லை. இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். நாடாளுமன்றம் அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் அமெரிக்காவை சேர்ந்த வரி செலுத்தக்கூடிய மக்களுக்கு நேரடியாகவே அவர்களின் வங்கி கணக்கிலேயே அமெரிக்க அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட தொகையை வரவு வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது .
ஒரு நபருக்கு சுமார் 1000 முதல் 2000 டாலர்கள் வரை அரசு பகிர்ந்து அளிக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இறக்குமதி வரியை உயர்த்ததன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு அமெரிக்கா விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குவது உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.