இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக பிரச்சனை முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு நீடித்துவரக்கூடிய சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி இடம் தொலைபேசி வாயிலாக பேசியதாக தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் விளக்குகளை ஏற்றி தனது நிர்வாகத்தில் உள்ள இந்தியா அமெரிக்கா உறுப்பினர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து டிரம்ப் பண்டிகையை கொண்டாடினார் . இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப் இந்திய மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.

நான் இன்று பிரதமர் நரேந்திர மோடி இடம் பேசினேன், என்னுடைய உரையாடல் சிறப்பாக அமைந்தது, அவர் ஒரு சிறந்த மனிதர் அவர் எனக்கு ஒரு சிறந்த நண்பராகவும் மாறிவிட்டார் என கூறினார். நாங்கள் நிறைய விஷயங்களை பற்றி பேசினோம் . குறிப்பாக அவருடன் நான் தற்போதைய வர்த்தக பிரச்சனைகள் குறித்து விவாதித்தேன் என்றார்.
எதிர்காலத்தில் இந்தியா ரஷ்யா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் என்றும் டிரம்ப் அப்போது குறிப்பிட்டார் . அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என நான் எப்படி எண்ணுகிறேனோ அதே தான் நரேந்திர மோடி விருப்பமாகவும் இருக்கிறது என கூறினார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வர வேண்டும் என்று தான் மோடியும் விரும்புகிறார் என தெரிவித்தார் .
ரஷ்யாவிடம் இருந்து அவர்கள் இனி அதிகபட்ச எண்ணெய் வாங்க மாட்டார்கள் படிப்படியாக அதை குறைத்துக் கொள்வார்கள் என்றும் அப்போது டிரம்ப் தெரிவித்தார். தற்போது இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசாங்கம் 50 சதவீத இறக்குமதி வரியை விதிக்கிறது . முதலில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரியை விதித்தது.
இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதாகவும் இது ரஷ்யாவின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தி உக்ரைன் போருக்கு உதவுவதாகும் குற்றம் சாட்டி கூடுதலாக 25 சதவீதம் என மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது .
இதற்கிடையில் இந்திய மற்றும் அமெரிக்க தரப்பில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடந்து வருகிறது . விரைவில் இந்த பேச்சுவார்த்தை முடிந்து முதல்கட்ட ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் மூலம் அமெரிக்கா , இந்திய பொருட்களுக்கு விதித்த வரி குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி என்பது இந்தியாவில் ஆடை உற்பத்தி, தோல் பொருட்கள், கடல் உணவுகள் என ஏற்றுமதி சார்ந்த துறைகளை பெருமளவில் பாதிக்க செய்துள்ளன. தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் துணி உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன.