அமெரிக்கா – சீனா மத்தியிலான வர்த்தக போர் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது, ஏற்கனவே சீனாவின் அரிய உலோக பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் டிரம்ப் அரசை 100 சதவீத வரியை அமலாக்கம் செய்ய தூண்டிய நிலையில், இத சரிக்கட்ட அக்டோபர் 31ஆம் தேதி தென் கொரியாவில் டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் சந்திக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இச்சந்திப்பில் அமெரிக்காவின் கை ஓங்கியிருக்க வேண்டும் என்பதற்காக 100 சதவீத வபியை தாண்டி தற்போது டிரம்ப் நிர்வாகம், சீனாவுக்கு லேப்டாப் முதல் ஜெட் இன்ஜின்கள் வரை அமெரிக்க மென்பொருள் சார்ந்த பல்வேறு பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது, சீனாவின் அரிய உலோக ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாக அமையும் என்று ஒரு அமெரிக்க அதிகாரிகள் ரெயூட்டர்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம், உலக அளவில் அமெரிக்க மென்பொருள் கொண்ட பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப், இந்த மாத தொடக்கத்தில் சீனாவுக்கு “முக்கிய மென்பொருள்” ஏற்றுமதியை தடை செய்வதாக ஏற்கனவே எச்சரித்திருந்தார். அக்டோபர் 10ஆம் தேதி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், சீனாவின் அமெரிக்கா செல்லும் ஏற்றுமதிகளுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், நவம்பர் 1ஆம் தேதிக்குள் “அனைத்து முக்கிய மென்பொருள்” மீது புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டம், அமெரிக்க மென்பொருள் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உலகளாவிய ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகை இது குறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தெரிவிக்கவில்லை. அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் வணிகத் துறையும் எவ்விதமான விளக்கமும் கொடுக்கவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, 2025 அக்டோபர் 31 அன்று தென் கொரியாவின் சியோல் நகரத்தில் நடைபெற உள்ளது. இது, ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடக்க உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஏபெக் உச்சி மாநாடு அக்டோபர் 31 முதல் நவம்பர் 1 வரை நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளில் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.