தவெக பிரச்சாரத்தின் போது நடந்த கரூர் கூட்டநெரிசலில் 41பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, விஜய்யும், தவெகவினரும் இப்போதுதான் மெல்ல மெல்ல வெளியில் வரத் தொடங்கியிருக்கின்றனர்.
இரண்டு நாள்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஆறுதலும், மன்னிப்பும் தெரிவித்தார் விஜய். அதைத்தொடர்ந்து இன்று சென்னை பனையூரில் தவெக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக துணைப்பொதுச்செயலாளர் ராஜ்மோகன், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்க்க தவெகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களை அனுமதிக்கவில்லை. நான்கூட திருச்சி ரோட்டில் இருக்கும் ஒரு தங்கும்விடுதியில்தான் தனிப்பட்ட முறையில் தங்கியிருந்தேன்.

இந்த விவகாரத்தில் எங்கள் சட்டப்போராட்டம், அரசியல் போராட்டம் என இரண்டு வழிகள் இருந்தன. நாங்கள் சட்டப்போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறோம். அமைதியான முறையில் நீதிக்காகக் காத்திருக்கிறோம். அமைதியாக இருந்தால் அரசியலில் அவதூறுகள், அடிகள் எல்லாம் வரத்தான் செய்யும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம். தவெக தலைவர் விஜய்யும் “நீதி வெல்லும்’ எனச் சொல்லியிருக்கிறார்.
இதையடுத்துப் பேசிய தவெக இணை பொதுச்செயலாளர் CTR நிர்மல்குமார், “ராஜ்மோகன், தவெக நிர்வாகிகள் எல்லாம் தலைமறைவாக இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லையே தவிர, தலைமறைவாக இல்லை” என்று பேசியிருக்கிறார்.
