கோட்டை விடும் வியூகத் தரப்பு:
விஜய்க்கு வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா தரப்பு மீதும் முக்கிய நிர்வாகிகள் சிலர் கடுப்பில் இருப்பதை அறிய முடிகிறது. இரண்டாமாண்டு தொடக்க விழாவில் திடீரென பிரஷாந்த் கிஷோர் எங்கிருந்து வந்தார்? விஜய் தனித்துதான் போட்டியிடுவார் என அவர் எப்படி அறிவித்தார்? திடீரென அவர் ஒதுங்கிக் கொண்டது ஏன்? என்கிற கேள்விக்கு இன்னமும் பல நிர்வாகிகளுக்கு பதில் தெரியவில்லை. விஜய்யை ‘Cult’ ஆக பிராண்டிங் செய்கிறேன் என சொதப்பலான வியூகங்களை ஜான் ஆரோக்கியசாமி வகுத்துக் கொடுக்கிறார் என ஒரு தரப்பு கடும் அப்செட்டில் இருக்கிறது.

இரண்டாண்டுகளில் விஜய்யை வைத்து உருப்படியாக ஒரு மக்கள் பிரச்னை சார்ந்த போராட்டத்தை கூட முன்னெடுக்க வைக்கவில்லை. செய்த ஒரே ஆர்ப்பார்ட்டம் அஜித் குமாரின் லாக் அப் டெத்துக்கு எதிராக மட்டும்தான். அதுவும் வெறும் 23 நிமிடங்களுக்கு மட்டும்தான். அதிலும் விஜய் மூன்றே மூன்று நிமிடங்களுக்கு மட்டும்தான் பேசினார். அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின் குமாருக்காக ஒரு இரங்கல் செய்தியை கூட வெளியிடவில்லை. இதே சமயத்தில்தான் இன்னொரு பக்கத்தில் தலித்துகளின் ஆதரவு எங்களுக்குதான் இருக்கிறது என தம்பட்டம் மட்டும் அடித்துக் கொண்டார்கள்.

கரூர் சம்பவத்தின் போதும் விஜய்யை அங்கிருக்க வேண்டாமென உடனே அழைத்ததும், சம்பவம் முடிந்து மூன்று நாட்கள் கழித்து முதல்வருக்கு சவால்விட்டு வீடியோ போட வைத்தது, ஊடகங்களில் பேச தயாராக இருந்த நிர்வாகிகளையும் அடக்கி வைத்ததென பல சம்பவங்களில் விஜய்யின் வியூக தரப்பின் மீது முக்கிய நிர்வாகிகளும் அவரின் Virtual Warriors -ம் அப்செட்டில் இருப்பதை அறிய முடிகிறது. இதெல்லாம் விஜய்க்கு தெரிகிறதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.
பேரழிவோ பெருந்துயரமோ ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும். கட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டுவிட்டு காணாமல் போவது ஒரு அரசியல் கட்சிக்கு அழகல்ல. மக்களுக்காக அல்ல, உங்களின் கட்சிக்காகவும் கட்டமைப்புக்காகவுமே நீங்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது விஜய்! தேர்தலுக்கு நேரமாகிவிட்டது. இனியாவது உஷாராகுங்கள்!