இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கான சம்பளம், ஓய்வூதிய தொகை உள்ளிட்டவை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. இவ்வாறு சம்பளத்தை மாற்றி அமைப்பதற்காக அரசு சார்பாக சம்பள கமிஷன் என்பது அமைக்கப்படுகிறது.
தற்போது ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் வழங்கப்பட்டு வருகிறது . இந்த ஏழாவது சம்பள கமிஷன் வரும் டிசம்பர் 31ஆம் தேதி உடன் காலாவதி ஆகிறது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு எட்டாவது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும் .

இத்தகைய சூழலில் தான் மத்திய அரசு கடந்த ஜனவரி மாதமே 8-வது சம்பள கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டது . ஆனால் அதன் பிறகு சம்பள கமிஷனுக்கான பணிகள் எதுவுமே நடைபெறவில்லை அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருந்தன. சம்பள கமிஷனுக்கான குறிப்புரைகள் நிர்ணயம் செய்யப்படவில்லை, அதேபோல சம்பள கமிஷனுக்கான தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்படவில்லை .
இதனால் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் கவலை அடைந்தனர். மத்திய அரசுக்கு சம்பள கமிஷன் பணிகளை தீவிர படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர். அரசுக்கு பல்வேறு கடிதங்களையும் எழுதினர். இத்தகைய சூழலில் தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 8ஆவது சம்பள கமிஷன் அமைப்பதற்கான டெர்ம்ஸ் ஆஃப் ரெபரென்ஸுக்கு ஒப்புதலை தந்திருக்கிறது. இது ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய பரிசாக அமைந்திருக்கிறது .
8ஆவது சம்பள கமிஷன் என்பது ஒரு தற்காலிக அமைப்பாக செயல்படும் . இதில் ஒரு தலைவர் , ஒரு உறுப்பினர் மற்றும் செயலாளர் அடிப்படையிலான ஒரு உறுப்பினர் என மூன்று பேர் இருப்பார்கள் . இந்த சம்பள கமிஷன் அமைக்கப்பட்ட 18 மாதங்களுக்குள் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை வழங்க வேண்டும் என அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார சூழல் , அரசின் நிதி நிலவரம், இந்த பரிந்துரையால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் நிதி சார்ந்த தாக்கம் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என சொல்லப்பட்டு இருக்கிறது .தற்போது சம்பள கமிஷன் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் தந்திருக்க கூடிய சூழலில் அடுத்ததாக கமிஷன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன பிரகாஷ் தேசாய் கமிஷன் தலைவராக செயல்படுவார். அதே போல் பேராசிரியர் புலாக் கோஷ் மற்றும் பங்கஜ் ஜெயின் ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மத்திய அரசு ஊழியர்களின் தற்போது சம்பளம் என்ன ,ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கக்கூடிய ஓய்வூதிய தொகை எவ்வளவு ,அகவிலைப்படி எவ்வளவு வழங்கப்படுகிறது, நாட்டில் பணவீக்கம் எவ்வாறு இருக்கிறது ஆகியவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு ஃபிட்மண்ட் ஃபேக்டர் என்பதை நியமனம் செய்வார்கள் . இதன் அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும் என்பது தெரியவரும் .
சம்பள கமிஷன் தன்னுடைய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கி அரசு அதனை ஏற்று நடைமுறைக்கு கொண்டு வர குறைந்தது 2 ஆண்டுகள் தேவைப்படும். இருந்தாலும் ஊழியர்களுக்கு 2026 ஜனவரி முதல் வழங்கப்பட வேண்டிய அரியர் தொகை சேர்த்து வழங்கப்படும். தாமதமானாலும் அரசு ஊழியர்களுக்கு அந்த தொகை அரியராக வழங்கப்பட்டு விடும்.


