[ad_1]
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC), நேற்று (அக்டோபர் 29) வெளியிட்ட கொள்கை முடிவின்படி, முக்கிய அளவுகோல் வட்டி விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து, 3.75% முதல் 4.00% என்ற வரம்புக்குள் நிர்ணயித்துள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையிலும், அரசாங்கம் முழுமையாக முடங்கியதால் பொருளாதார தரவுகளை ஆய்வு செய்ய முடியாத நிலையிலும், வட்டி விகிதத்தை மத்திய வங்கி 2-வது முறையாக குறைத்துள்ளது டிசம்பர் 2024 முதல் வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் இருந்த நிலையில், தற்போது இந்த வட்டிக் குறைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

5 முக்கிய அம்சங்கள் : வட்டி விகிதக் குறைப்புக்கு ஆதரவு : FOMC-யின் 12 உறுப்பினர்களில் 10 பேர் வட்டி விகிதக் குறைப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் 50 bps குறைக்க வேண்டும் என்றும், மற்றொருவர் மாற்றமின்றி வைத்திருக்க வேண்டும் என்றும் கோரினர்.
டிசம்பரில் மீண்டும் குறைப்பு : டிசம்பர் 2025 கூட்டத்தில் மீண்டும் வட்டி விகிதக் குறைப்பு இருக்குமா என்ற சந்தைப் எதிர்பார்ப்புக்குப் பதிலளித்த அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், வரும் காலங்களில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே அடுத்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பணவீக்கம் குறித்த கவலை : நாட்டில் உள்ள பொருட்களின் விலை ஏற்றத்தால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதை ஜெரோம் பவல் ஒப்புக் கொண்டார். செப்டம்பர் 2025 நிலவரப்படி நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 3% ஆக உயர்ந்தது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த கடுமையான வரிகள் தான் இந்தப் பொருட்களின் விலை ஏற்றத்திற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர் சந்தை : அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைந்துள்ளதாகவும், வேலையின்மை விகிதம் சற்று உயர்ந்திருந்தாலும் ஆகஸ்ட் வரை குறைவாகவே இருந்தது என்றும் FOMC தெரிவித்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது எடுத்த நடவடிக்கையால், குடியேற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததே தொழிலாளர் சந்தையின் இந்த மந்தநிலைக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் விளக்கினார்.
நிச்சயமற்ற பொருளாதாரப் பார்வை : அமெரிக்காவின் எதிர்காலப் பொருளாதாரப் பார்வை குறித்த நிச்சயமற்ற தன்மை இன்னும் அதிகமாகவே உள்ளது என்று மத்திய வங்கி ஒப்புக்கொண்டது. அதிகபட்ச வேலைவாய்ப்பை அடைவது மற்றும் பணவீக்கத்தை 2% ஆக குறைப்பது ஆகிய இலக்குகளை அடையும் நோக்கில், பெறப்படும் தரவுகளைக் கவனமாக ஆய்வு செய்து முடிவெடுக்கப் போவதாக FOMC உறுதியளித்துள்ளது.
[ad_2]
