அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாள்தோறும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உலக பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார். டிரம்பின் வர்த்தக நடவடிக்கைகள் உலக முழுவதும் முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி நகர வைத்திருக்கிறது. இதனால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலையை மேலும் உயர்த்தக் கூடிய ஒரு அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான இறக்குமதி வரிகளை விதித்த வண்ணம் இருக்கிறார். இந்திய பொருட்களுக்கு தற்போது 50 சதவீத வரிவிதிப்பு நடைமுறையில் இருக்கிறது . இத்தகைய சூழலில் சீன பொருட்களுக்கு 155 சதவீத இறக்குமதி வரி விதிப்பேன் என அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அதிகபட்ச வரியை விதிக்கின்றன ஆனால் அமெரிக்கா இந்த நாடுகளின் பொருட்களுக்கு குறைந்த வரி தான் விதிக்கிறது எனவே நான் போட்டி வரி விதிக்க போகிறேன் என தான் அதிபராக பதவியேற்ற உடனேயே அறிவிப்பு வெளியிட்டார் டிரம்ப். இதனை அடுத்து பல்வேறு நாடுகளுக்கும் அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்தார் . பின்னர் சிறிது காலம் அதனை தள்ளி வைத்திருந்தார். டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளும் வர்த்தக போர்களும் உலக பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.
இத்தகைய சூழலில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா அமெரிக்காவிடம் மிக மோசமான வர்த்தக நடைமுறைகளை பின்பற்றுவதாக கூறியிருக்கிறார். தற்போது சீன பொருட்களுக்கு 55 சதவீத இறக்குமதி வரி விதித்திருக்கிறோம் இருந்தாலும் நவம்பர் 1ஆம் தேதிக்குள் சீனா ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவில்லை என்றால் சீன பொருட்களுக்கு 155 சதவீத வரியை விதிப்போம் என தெரிவித்திருக்கிறார்.
டிரம்ப் இவ்வாறு வரியை உயர்த்தினால் உலக சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். இது சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதலை மேலும் வலுப்படுத்தும் . சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய உலகின் பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான இந்த வர்த்தக மோதல் மேற்கொண்டு தங்கத்தின் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
இதற்கிடையே இந்த மாத இறுதியில் சீன அதிபர் ஸீ ஜின் பிங்கை டிரம்ப் சந்திக்க இருக்கிறார். தென்கொரியாவில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. அந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.