இந்தியா – அமெரிக்கா மத்தியிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்து வரும் வேளையில், முக்கியமான திருப்பம் அடுத்த மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், அமெரிக்கா தனசு ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு மூலம் பல நாடுகளுடன் வர்த்தக போரை துவங்கியிருக்கும் வேளையில், அக்டோபர் 30 – நவம்பர் 1 ஆம் தேதி சீனா உடன் வர்த்தக பிரச்சனைகளை தீர்த்து முக்கிய முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து இந்தியா மீது விதிக்கப்பட்டு இருக்கும் 50 சதவீத ரெசிப்ரோக்கல் வரியில் 25 சதவீத வரியை குறைக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக நோமூரா ரிப்போர்ட் கூறுகிறது. இதற்கு முக்கியமான காரணம் ரஷ்யா.

அமெரிக்க அரசு ரஷ்யாவின் இரு பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்களான லுகோயில் மற்றும் ரோஸ்னெப்ட் மீது புதிய வர்த்தக தடைகள் விதிக்கப்பட்டு உள்ளது. இது மட்டும் அலாலமல் இவ்விரு நிறுவனங்களுடன் வணிகம் செய்யும் வெளிநாட்டு வங்கிகளுக்கும் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலையும் அமெரிக்கா முன்வைத்துள்ளது.
இதனால் இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளியுள்ளது. இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா தொடர்ந்து 33 சதவீத பங்கீட்டை கொண்டு இருக்கும் வேளையில், நவம்பர் இறுதியில் இருந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறையும் என்று நோமுரா இந்தியா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அரசுக்கு செலவை உயர்த்தும்.
ஆனால் இந்த செலவு அதிகரிப்பை அமெரிக்கா குறைக்கப்போகும் 25 சதவீத வரி மூலம் ஈடு செய்ய முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. அமெரிக்கா, இந்தியா மீது 25 சதவீத வரியை ரெசிப்ரோக்கல் வரியாக முதலில் விதித்தது. இதை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது மூலம் உக்ரைன் மீதான தாக்குதலை ஊக்குவிக்கப்படுகிறது என குற்றம்சாட்டி 25 சதவீத வரியை அபராத வரியாக விதித்தது.
இந்த நிலையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்த கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டால், அமெரிக்கா விதித்த அபராத வரியை நீக்கும். இதனால் அமெரிக்கா – இந்தியா மத்தியிலான வர்த்தகம் அதிகரிக்கும் இதன் மூலம் ரஷ்ய எண்ணெய் வாங்குவது மூலம் கிடைக்கும் 1.8 முதல் 2.2 டாலர் வரையிலான தள்ளுபடி ஈடு செய்ய முடியும். இந்த 2.2 டாலர் உயர்வும் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.04 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று நோமுரா கணித்துள்ளது.
இதேவேளையில் இந்த 2.2 டாலர் உயர்வு நாட்டு மக்கள் வாங்கும் பெட்ரோல், டீசல் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் நிலவுகிறது. சர்வதேச சந்தையில் இதுநாள் வரையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த நிலையிலும், இந்திய ரீடைல் சந்தையில் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த சில வருடங்களாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் விற்கப்பட்டு வருகிறது.
தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்யா கச்சா எண்ணெய் அளவும் குறைகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
