உலக அளவில் மிகப்பெரிய ஸ்மார்ட் போன் சந்தையாக இந்தியா திகழ்கிறது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கக்கூடிய இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய புதிய மாடல் போன்களை இந்திய சந்தையில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை நுழைவு நிலை மற்றும் பட்ஜெட் போன்களுக்கான தேவை தான் அதிகம். ஏனெனில் பெரும்பாலான இந்திய மிடில் கிளாஸ் மக்கள் குறைந்த விலையில் அதே வேளையில் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட் போன்களை வாங்குவதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள் . இத்தகைய சூழலில் கூடிய விரைவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் விலை உயரப்போவதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது.

டிரெண்ட் ஃபோர்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி உலக அளவில் பட்ஜெட் மற்றும் லோ என்ட் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படக்கூடிய மெமரி சிப்புகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது . அதாவது மெமரி சிப் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் பட்ஜெட் போன்களுக்கான சிப்கள் தயாரிப்பை கைவிட்டு ஹை எண்ட் போன்கள் மற்றும் அதிக ஏஐ திறன் கொண்ட கருவிகள், டேட்டா செண்டர்கள் ஆகியவற்றுக்காக சிப் தயாரிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
இதனால் பட்ஜெட் போன்களில் பயன்படுத்தப்படும் மெமரி சிப்களின் தட்டுப்பாடு அதிகரித்து அதன் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் போன் தயாரிக்க ஆகும் செலவு உயர்ந்து வருவதால் நிறுவனங்கள் அந்த செலவை வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்த முடிவு செய்துள்ளன.தற்போது உலக முழுவதும் ஏஐ பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ப டேட்டா செண்டர்கள் தேவையும் அதிகரித்துள்ளன. அவற்றுக்கான உபகரணங்களுக்கு உயர் திறன் கொண்ட சிப்கள் தேவைப்படுகின்றன, எனவே சிப் உற்பத்தியாளர்கள் இதில் அதிக லாபம் பார்க்கின்றனர் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
நடப்பாண்டின் நாலாவது காலாண்டில் இருந்து ஸ்மார்ட் போன்களின் விலை குறிப்பாக பட்ஜெட் போன்களின் விலை அதிகரிக்கும் என டிரெண்ட் ஃபோர்ஸ் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே இந்த விலை உயர்வின் தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் LPDDR4X எனப்படும் ரேமின் விலை 10% உயரக்கூடும், இது ஸ்மார்ட் ஃபோன்களின் ஒட்டுமொத்த விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என டிரெண்ட் ஃபோர்ஸ் கூறுகிறது . முன்னதாக ஸியோமி நிறுவனத்தின் தலைவர் லூ வேபிங், தங்கள் நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்ததை அடுத்து மெமரி சிப்புகளுக்கான செலவினம் அதிகரித்ததே போன்களின் விலையை உயர்த்த காரணம் என சமூக வலைத்தளமான வெய்போவில் விளக்கம் தந்திருந்தார்.


