அமெரிக்க அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது 50 சதவீத வரியை விதித்திருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் இந்த 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி துறை சார்ந்த இயங்கக்கூடிய ஆயிரக்கணக்கான தொழில்களும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இதன் மூலம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் திருப்பூர், கரூர் ,ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் பெருமளவில் அமெரிக்க சந்தையை நம்பி தான் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கின்றனர். ஆனால் இந்த 50 சதவீத வரி விதிப்பு அவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தீவிரமாக வர்த்தக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

எப்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டு இருக்கிறார். விரைவில் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட போகிறது என்ற தகவலை டிரம்ப் வெளியிட்டு இருக்கிறார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தென்கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடி நல்ல அழகான தோற்றம் உள்ளவர் , அவர் ஒரு சாதனையாளர் அவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் எனக்கு உண்டு என கூறினார் . மோடிக்கும் எனக்கும் சிறந்த நட்புறவு இருக்கிறது என குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுடனும் அடுத்தடுத்து அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது , விரைவில் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்ற தகவலை அவர் வெளியிட்டார். தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சு வார்த்தை என்பது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதன் படி இந்தியாவிற்கான வரி விதிப்பு என்பது 15% என குறைக்கப்படும் என்ற நல்ல தகவலும் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.
அமெரிக்கா முதலில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தது பின்னர் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை ஒரு காரணமாக கூறி கூடுதலாக 25% என மொத்தமாக 50 சதவீத வரியை விதித்து இருக்கிறது. இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் தற்போது அது மீண்டும் பழைய நிலைக்கு வர தொடங்கியுள்ளது.


