சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது . சாதாரண குடும்பத்தை சேர்ந்த மக்கள் தங்கத்தை நகையாக வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு தங்கம் விலை உயர்வு கண்ணீரை வரவழைப்பதாக இருக்கிறது.
தங்க நகை: தங்கத்தை நகையாக தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு நகைக் கடைகளும் நடத்தக்கூடிய நகைச்சீட்டு திட்டங்கள் சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றன. அதாவது நகை சீட்டுகள் மூலம் நாம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். 11 மாதங்கள் முடிந்த பின் நான் செய்த முதலீடுக்கு நாம் தங்கத்தை வாங்கி கொள்ளலாம்.

விலை எவ்வளவு: இன்றைய நாளில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் 97 , 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாம் கடைக்கு சென்று ஒரு பவுனுக்கு செயின் வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம் . அந்த செயினுக்கு 20% செய்கூலி விதிக்கப்படுகிறது என்றால் நாம் செய்கூலியாக மட்டுமே 19,488 ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது ஒரு பவுன் வாங்குவதற்கு நாம் நகை கட்டணம், செய்கூலி மற்றும் ஜிஎஸ்டி மூன்று சதவீதம் என சேர்த்து மொத்தமாக 1,20,000 ரூபாயை செலுத்த வேண்டியிருக்கும் .
நகைசீட்டில் எவ்வளவு சேமிப்பு: இதுவே நாம் நகை சீட்டு மூலம் நகை வாங்குகிறோம் எனும் போது இந்த 19,488 ரூபாய் செய்கூலி சேதாரத் தொகை செலுத்த வேண்டியதில்லை. மேலும் 11 மாதங்கள் சிறுக சிறுக முதலீடு செய்திருப்பதால் நீங்கள் செலுத்திய தொகையை விட இன்றைய விலைக்கு ஒப்பிட்டால் குறைந்த விலைக்கே அதிக மதிப்பு கொண்ட நகையை வாங்கி இருப்பீர்கள்.
நகை சீட்டுகள்: அதாவது நகை சீட்டு போட்டிருந்தால் ஒரு பவுனில் உங்களுக்கு செய்கூலியில் சுமார் 20000 ரூபாய் சேமிக்க முடியும். அது மட்டும் இன்றி ஒரே அடியாக ஒரு லட்சம் ரூபாயை கொடுத்து நகை வாங்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நாம் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை நகை சீட்டில் வரவு வைத்துவிடுகிறோம். எனவே இனி வரும் காலங்களில் சாமானிய மக்கள் தங்கத்தை நகையாக வாங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு நகை சீட்டுகள் தான் மிகச் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன.

முதலில் கவனிக்க வேண்டியது: இவ்வாறு நகைச்சீட்டு போடுவதற்கு முன்னர் சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது. முதலில் நாம் சீட்டு போடக்கூடிய கடை எத்தனை ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறது, புகழ் பெற்ற நிறுவனமா, தரமான தங்க நகைகளை விற்பனை செய்கின்ற நிறுவனமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் பல்வேறு நிறுவனங்களும் நகை சீட்டு என வாடிக்கையாளரிடம் பணம் பெற்று விட்டு இறுதியில் ஏமாற்றி விடும் கதைகளை நாம் செய்திகளில் அடிக்கடி பார்க்கிறோம். நீங்கள் சீட்டு போடக்கூடிய கடை புகழ்பெற்ற அதே வேலையில் நீண்ட காலம் இந்த தொழிலில் இருக்கக்கூடிய பாரம்பரிய நிறுவனமா என்பதை கவனிக்க வேண்டும்.
எப்படி சேமிக்கப்படுகிறது?: எவ்வளவு தொகையை நகை சீட்டு போட போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் . சில கடைகளில் குறிப்பிட்ட தொகை அதாவது மாதத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் என்றால் தொடர்ந்து பதினோரு மாதங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் செலுத்த வேண்டியதாக இருக்கும் சில கடைகள் ஃபிளெக்சிபில் என்ற முறையில் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் என்றால் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் கூட உங்களால் எவ்வளவு தொகையை வர வைக்க முடியுமோ அவ்வளவு தொகையை வரவு வைக்கலாம் என்ற வாய்ப்பையும் வழங்குகின்றன . எனவே அந்த இரண்டையும் சரிபார்த்துக் கொள்வது நல்லது.
என்ன நிபந்தனை?: குறிப்பிட்ட சில நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை நிறுவனங்கள், நகை கடைகள் அறிவிக்கும். அந்த நிபந்தனை மற்றும் விதிமுறைகளை படித்துப் பார்த்துக் கொள்வது நல்லது. சில கடைகள் ஒரு மாத தவணையை நாங்கள் செலுத்தி விடுகிறோம் என கூறுவார்கள், சில கடைகளில் அனைத்து மாதமும் நீங்கள் தான் செலுத்த வேண்டும் நாங்கள் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பரிசு பொருளை வழங்குவதாக கூறுவார்கள்.
100% செய்கூலி இல்லையா?: சில கடைகள் நாம் செலுத்தக்கூடிய பணத்தை அன்றைய தேதியில் பணமாகவோ அல்லது கிராமங்களுக்கான தங்க யூனிட்டுகளாகவும் வரவு வைக்கும். இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்பதை தெரிந்து கொள்வது கட்டாயம். சில நகைக்கடைகள் நகைச்சீட்டில் நகை வாங்கும் போது செய்கூலி சேதாரத்தில் இருந்து 100% விலக்கு என அறிவிக்கும் சில கடைகள் 50% விலக்கு என அறிவிக்கும். உங்கள் திட்டத்தில் எதில் வருகிறது என கவனிக்க வேண்டும்.
தவணை தவறினால்: மாதம் தோறும் எந்த தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும், ஒரு தவணையை செலுத்த தவறினால் என்ன ஆகும், 6 மாதங்களிலேயே நகை சீட்டை நிறுத்தி நகை எடுக்கும் சூழல் வந்தால் என்ன செய்வது என்பன உள்ளிட்ட அனைத்தையும் கடையில் இருப்பவர்களிடம் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ல வேண்டும், அவர்களின் விதிமுறைகளை விரிவாக படிக்க வேண்டும்.
நகை சீட்டு லாபம் தானா?: கண்டிப்பாக தங்கத்தை நகையாக வாங்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள் , ஒரே அடியாக லட்சக்கணக்கில் பணத்தை கொடுக்க முடியாத சூழலில் இருப்பவர்கள், சிறுக சிறுக பணத்தை சேமித்து தேவையான நகைகளை வாங்குவதற்கான வாய்ப்பினை நகைச் சீட்டுகள் வழங்குகின்றன. தங்கம் விலை ஏறும் போதெல்லாம் நகை சீட்டுகள் உங்களுக்கு பெரிய லாபத்தை பெற்று தரும்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு 7,455 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் ஆபரண தங்கம் இன்று 12,000 ரூபாயை கடந்து விற்கப்படுகிறது. அப்படி என்றால் கடந்த ஆண்டு தீபாவளிக்கு நகை சீட்டு போட்டவர்களுக்கு இந்த ஆண்டு நகையாக வாங்கும் போது எவ்வளவு லாபம், கிடைத்திருக்கும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். அத்துடன் செய்கூலி சேதாரம் குறித்த கவலையும் இல்லை.
இதில் கவனம் தேவை: ஆனால் நகைச்சீட்டு போட்டுவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. நகை சீட்டுகளை அரசோ செபி போன்ற அமைப்புகளோ ஒழுங்குபடுத்துவதில்லை. எனவே சீட்டு போட்ட நிறுவனம் ஏமாற்றி விட்டால் சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்காது. இதற்காக தான் நகைச்சீட்டு போடும் முன்பு அது பெரிய அளவிலான நீண்ட கால பாரம்பரியம் கொண்ட கடையா என கவனிப்பது அவசியம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.