இந்தியாவின் நடுத்தர வர்க்கம் கடுமையாக உழைத்து, நல்ல வருமானம் ஈட்டிய போதிலும், செல்வத்தை உருவாக்க முடியாமல் தவிப்பது ஏன்? இது வருமான குறைபாட்டால் அல்ல, மாறாகப் பணத்தைக் கையாளும் முறையில் உள்ள தவறான பழக்கவழக்கங்களே காரணம் என்கிறார் ‘டைம்’ (Dime) நிறுவனத்தின் நிறுவனர் சந்திரலேகா எம்.ஆர்.
இதுதொடர்பாக தனது லிங்க்ட்இன் பதிவில், இந்திய நடுத்தர வர்க்கத்தை நிதி வளர்ச்சிக்கு விடாமல், வெறும் பிழைப்பு வட்டத்தில் சிக்க வைக்கும் 4 பொதுவான நிதி நடத்தைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பழக்கங்கள் தான் அவர்களின் நிதி சுதந்திரத்தைத் தடுப்பதாகவும் அவர் கூறுகிறார்.

பெரும்பான்மையான பணப் பிரச்சனைகள் கணிதம் சார்ந்தது அல்ல, மாறாக நமது நடத்தை சார்ந்தது என்று சந்திரலேகா தெரிவித்துள்ளார். ஒரு மாத சம்பளம் வந்தவுடன், முதலில் செலவுகள் மற்றும் EMI-கள் செலுத்தப்படுகின்றன. பணம் மிஞ்சினால் மட்டுமே சேமிப்பு நடக்கிறது. இதை அவர், நிதித் திட்டம் அல்ல. நிதி உயிர்வாழ்வு மட்டுமே என்று குறிப்பிடுகிறார்.
நிதி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் 4 முக்கிய நிதிப் பழக்கங்கள் : கடனை சாதாரணமாகப் பார்ப்பது : கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI-கள் இன்று நிதி முன்னேற்றத்தின் அடையாளங்களாகப் பார்க்கப்படுகின்றன. இது ஒரு எச்சரிக்கை மணி என்பதைப் பலர் மறந்து விடுகின்றனர். கடனை ஒரு சாதாரண விஷயமாக கருதுவது, தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது.
பாதுகாப்பு நிதி இல்லாதது : அவசர கால நிதி என்ற ஒன்று இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலவீனம். ஒரு எதிர்பாராத மருத்துவச் செலவு அல்லது வேறு அவசரம் ஏற்பட்டால், அது பல வருட உழைப்பின் சேமிப்பையும் ஒரே நொடியில் கரைத்துவிடக் கூடும். நிதிப் பாதுகாப்பு இல்லாததால், எந்தச் சவாலையும் எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
அங்கீகாரத்திற்காக வாங்குவது : வீடுகள், கார்கள், விலையுயர்ந்த எலெக்ட்ரானிக் சாதனங்கள் போன்றவற்றை தாங்கள் ஈட்டும் வேகத்தை விட வேகமாக, கடன் மூலம் வாங்குவது ஒரு பொதுவான பழக்கமாக உள்ளது. இது சமூகத்தில் தங்களின் மதிப்பைக் காட்ட மேற்கொள்ளப்படும் செலவினமே தவிர, நிதி ரீதியாக அவசியமானதல்ல.
ஒழுங்கற்ற முதலீடு : திட்டமிட்ட அணுகுமுறை இல்லாமல், அவ்வப்போது ட்ரெண்டுகளைப் பார்த்து முதலீடு செய்வது அல்லது மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக முதலீடு செய்வது. அதன் பலனான கூட்டு வளர்ச்சியை பாதிக்கின்றது. இதனால் நீண்ட கால இலக்குகளை அடைய முடியாமல் போவதுடன், சந்தை இறங்கும்போது பீதியடைந்து விற்றுவிடுகிறார்கள்.
பணக்காரர்களின் ஃபார்முலா : சந்திரலேகா கூறுவது என்னவென்றால், பணக்காரர்கள் அதிகம் சம்பாதிப்பது ஒரு முறையான கட்டமைப்பைப் பின்பற்றுவதன் மூலம்தான். அவர்களின் ஃபார்முலா மிகவும் தெளிவானது. பாதுகாப்பு, நிலைத்தன்மை, சுதந்திரம் ஆகிய இந்த மூன்றும் தான் அவர்களின் ஃபார்முலா.
அதாவது செலவு செய்வதற்கு முன் சேமிப்பது, கடன்களைத் திட்டமிட்டு அடைப்பது மற்றும் முதலீடுகளைத் தொடர்ந்து செய்வதற்காக தானியங்குமயமாக்குவது போன்றவற்றை செயல்படுத்துகிறார்கள். இந்தச் செயல்முறைகள் நிலைத்தன்மையையும் சீரான வளர்ச்சியையும் உறுதி செய்கின்றன.
நடுத்தர வர்க்கம் தங்கள் சம்பளத்திற்குக் கொடுக்கும் அதே மரியாதையை, நிதி அமைப்புகளுக்கும் கொடுக்கக் கற்றுக் கொள்ளும் நாள்தான், உண்மையான நிதிச் சுதந்திரம் தொடங்கும் நாள் என்று சந்திரலேகா கூறியுள்ளார். எனவே, பணத்தைச் சேமிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் ஒரு திட்டவட்டமான கட்டமைப்பை உருவாக்குவதே நிதி வளர்ச்சிக்கான திறவுகோல் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
