தேர்தல் ஆணையத்தின் மீதும், நடந்து முடிந்த நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இது தொடர்பாக பல்வேறு ஆதாரங்களுடன் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது “வாக்குத் திருட்டு” குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாக, கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் வாக்காளர் நீக்கம் நடந்திருக்கிறது என ஆணித்தரமாக அடித்துப் பேசினார்.
இந்த நிலையில், 2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆலந்து தொகுதியில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விரிவாக விசாரணை செய்ய கர்நாடக காவல்துறையால் ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் விசாரணையில் ஆலந்து தொகுதியில் வாக்காளர் நீக்கம் மோசடி நடந்திருக்கிறது என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக வெளியான தகவலில், கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் ஒரு தரவு மையம் செயல்பட்டிருக்கிறது. இந்த தரவு மையத்தை அஷ்பக் என்பவர் இயக்கியது தெரியவந்தது.
இது தொடர்பாக 2023-ல் விசாரிக்கப்பட்ட அஷ்பக், தான் குற்றமற்றவர் என்று கூறி, தன்னிடம் உள்ள மின்னணு சாதனங்களை ஒப்படைத்தார். அதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட அஷ்பக் துபாய் தப்பிச் சென்றார்.
அவர் ஒப்படைத்த மின்னணு சாதனங்களை ஆய்வு செய்ததில் அவரின் கூட்டாளியான எம்.டி. அக்ரம் உள்ளிட்ட மூன்று பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும், டிசம்பர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை ஆலந்து தொகுதியில் போலி விண்ணப்பங்கள் மூலம் 6,018 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், ஒவ்வொரு விண்ணப்பத்துக்கு ரூ.80 என மொத்தம் ரூ.4.8 லட்சம் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது.
அந்தப் போலி வாக்காளர் பட்டியல் விண்ணப்பத்தில், கோழிப்பண்ணைத் தொழிலாளி முதல் காவல்துறையினரின் உறவினர்களின் எண்கள் வரை 75 செல்போன் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த 6,018 வாக்காளர்களில் 24 பேர் மட்டுமே இடம் மாறுதல் காரணமாக பெயர் நீக்கம் கோரியவர்கள் என்பதும், மற்ற யாருக்கும் அவர்களின் பெயர் நீக்கம் தொடர்பாக எந்தத் தகவலும் தெரியாது என்பதும் கண்டறியப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆலந்து தொகுதியில் 2023-ல் காங்கிரஸின் பி.ஆர். பாட்டீலிடம் தோல்வியடைந்த, 4 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த பா.ஜ.க வேட்பாளர் சுபாஷ் குட்டேதர், மற்றும் அவரின் மகன்கள் ஹர்ஷனந்தா, சந்தோஷ், இவர்களின் ஆடிட்டர் மல்லிகார்ஜுன் மஹந்தகோல் ஆகியோரிடம் எஸ்.ஐ.டி விசாரணை மேற்கொண்டது.
மேலும், அவர்கள் தொடர்புடைய சொத்துகள் மீது அக்டோபர் 17 அன்று சோதனை நடத்தப்பட்டது.
அப்போது மொபைல் போன்களுடன் ஏழுக்கும் மேற்பட்ட மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்ததாகவும், பணம் செலுத்தப்பட்டதற்கான ஆதாரம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் எஸ்.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரம், போலியான சான்றுகளைப் பயன்படுத்தி தேர்தல் ஆணைய போர்ட்டலுக்குள் எவ்வாறு அணுகல் பெறப்பட்டது, எப்படி வாக்காளர் நீக்க கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதை எஸ்.ஐ.டி இன்னும் தீர்மானிக்கவில்லை.
இது தொடர்பாக பேசிய பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ சுபாஷ் குட்டேதர், “வாக்காளர் நீக்க முயற்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.ஆர். பாட்டீல் தனிப்பட்ட ஆதாயத்திற்காக இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
பி.ஆர். பாட்டீல் அமைச்சராக விரும்புகிறார். தேசிய அளவில் கவனம் பெற என்மீது கடும் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, “பா.ஜ.க வெறும் ரூ.80-க்கு வாக்காளர்களின் உரிமையை பறித்திருக்கிறது.

இது இந்த அரசுக்கும், மக்களுக்கும் அவமானம். எஸ்.ஐ.டி-யின் கண்டுபிடிப்புகள் ‘வாக்குச் சோரி’ என்பது தற்செயலானது அல்ல.
மாறாக நமது தேர்தல்களில் மோசடி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட, நன்கு நிதியளிக்கப்பட்ட ஒரு மோசடி என்பதை உறுதிப்படுத்துகின்றன.
நாம் இன்னும் வலிமையாக குரல் கொடுத்தால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து இந்த சம்பவங்கள் அம்பலப்படும்” என்றார்.