கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட கே.பாப்பாரப்பட்டி கிராமத்தின் கொல்லக்கொட்டாய் பகுதியில் உள்ள தார்ச்சாலை மிகவும் சேதமடைந்து தார் எழும்பி குண்டும் குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு இதுவே பிரதான சாலையாக இருப்பதால் அன்றாடம் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வரும் மக்களும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று வரும் மாணவர்களும் இதனால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இப் பிரச்னை குறித்து அப்பகுதி மக்கள் பேசும்போது,
“இந்தச் சாலை அமைத்து குறைந்தது பத்து வருடங்கள் ஆகிறது. இவ்வாறு முற்றிலும் சேதமடைந்து ஐந்து வருடங்களுக்கும் மேலாகிறது. மழைக்காலங்களில் இந்தச் சாலையில் நடக்கக் கூட முடிவதில்லை. பள்ளங்கள் நிரம்பி, தண்ணீர் தேங்கி நின்று, வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. வீதியில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர்கள் என அனைவரும் வெளியில் சென்றாலே அச்சத்திலே இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது” என தங்களுடைய வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.